
வரும் மே 17ம் தேதி நாளை மறுநாள், ஆம்பன் புயல் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில் மக்களை வாட்டி வருகிறது. எனினும் மாநிலத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
தற்போது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருப்பது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை மாறும் என்றும், இது நாளை புயலாக வலுப்பெறும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தற்போது உருவாகி வரும் இந்தப் புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆம்பன் புயல் 17ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகரக் கூடும்! இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவுப் பகுதி, குமரி கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.