
கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
தமிழகத்தில் 11224 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 39 அரசு மற்றும் 22 தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!
தற்போதும் 477 மாதிரிகள் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும் 15 ஆயிரத்து 99 மாதிரிகள் மறு ஆய்வுகளுக்கு உட்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்து 19 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளன.
தற்போது 6971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். இன்று தமிழகத்தைச் சேர்ந்த 558 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 73 பேர், கர்நாடகத்திலிருந்து வந்த 2 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 2 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 3 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் ஆகியோருக்கு கொரானா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து மொத்தமாக 639 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது!
இதுவரை தமிழகத்தில் 11 ஆயிரத்து 224 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 398 பேர் ஆண்கள் 241 பேர் பெண்கள். இதுவரை 7 ஆயிரத்து 343 பேர் ஆண்கள், 3 ஆயிரத்து 878 பேர் பெண்கள். மூன்று பேர் திருநங்கையர்!
இன்று 634 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 172 பேர் இவ்வாறு குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலையில் சென்னையில் அதிகபட்சமாக 480 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து சென்னையில் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது!
சுகாதார துறை நேற்றைய அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவர் குணமடைந்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் 20 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

