வரத்து குறைவாலும் விலை உயர்வாலும், இளநீர் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது. மதுரையில் விலை உயர்வால் இளநீர் வியாபாரம் குறைந்து விட்ட நிலையில், செலவு அதிகம் செய்து கொண்டு வந்ததால் தாங்கள் இழப்பை சந்தித்து வருவதாக வியாபாரிகள் கூறினர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தேங்காய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழகக்தில் பல மாவட்டங்களில் தோப்புகளில் இளநீர் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கினாலும், அதை வெட்டி வியாபாரத்துக்கு அனுப்பி வைக்க, தேங்காய் வெட்டுத் தொழிலாளர்கள் குறைவு தான்.
மதுரை, திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தோப்புகளில் வெட்டப்படும் இளநீர் லாரிகள், மினி வேன்கள் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள மொத்த குடோன் மூலம் தான் மதுரை நகரில உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பல மாவட்டங்களில் தென்னந்தோப்புகளில் 40 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது. அத்துடன், இளநீரை சில தோப்புகளில்தான் வெட்ட அனுமதிக்கின்றனர். இவ்வாறு இளநீர் மரத்திலிருந்து வெட்டி இறக்க போதுமான தொழிலாளர்கள் இப்போது இல்லை. கொரோனா காலம் என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருவதாகவும், மேலும் வாகன வாடகை உயர்ந்திருப்பதாலும் தற்போது இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மதுரை அண்ணாநகர் இளநீர் சில்லறை வியாபாரி சாமி கூறியபோது… கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் இளநீர் விற்பனை நல்ல நிலையில் இருந்ததாகவும், இளநீர் ரூ. 30-க்கு விற்க நேர்ந்தது. தற்போது இளநீரை தோப்புகளில் வெட்டுவதற்கு போதிய தொழிலாளர்கள் பணிக்கு வராததாலும், வாகன வாடகை அதிகரித்ததாலும் இளநீர் விலை உயர்ந்து விட்டது. இதனால் இளநீர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை