
அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ஏ.முத்துராமன், மாவட்ட செயலாளர் மு.சங்கர் ராமன் உள்பட அந்த அமைப்பின் நிர்வாகிகள் சுமார் 15 பேர் இன்று நெல்லை மாநகர் காவல் துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணனைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில்,
காட்மென் என்கிற ஆன்லைன் படம் ஒன்றின் டிரெய்லர் சமீபத்தில் ஜீ5 என்கிற ஆன்லைன் சேனலில் வெளியாகி உள்ளது. அதில் பிராமணர்களைப்
பற்றியும், இந்து மதத்தைப்பற்றியும், அவதூறான கருத்துக்களும் கொச்சையான
காட்சிப்படுத்துதல்களும், வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி ட்ரெய்லர், வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை
தூண்டும் வகையிலும் அதன் மூலம் பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து மத வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப் படுத்தும் நோக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளைத் தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் கொள்ள ஊக்கமூட்டும் நோக்கத்திலும், மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப் படுத்தும் வகையில் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்கலைக்கும் வகையிலும், உண்மைக்குப் புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டி, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எனவே மேற்குறிப்பிபட்ட அந்தப் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன், இளங்கோ (தயாரிப்பாளர்) நடிகர்கள், நிர்வாக இயக்குனர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(A), 295, 295(A), 296, 298, 499, 404, 505, 188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.