
மதுரை : பிழைப்புக்காக மதுரை மாவட்டத் தொழிலாளர்கள் பலர் வெளி மாவட்டத்துக்கு புலம் பெயர தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், திருவேடகம், சமயநல்லூர், தேனூர், பரவை, கருப்பட்டி, இரும்பாடி, குருவித்துறை, மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, ஆலங்கொட்டாரம், பேரையூர் ஆகிய பகுதிகளில் கொடிக்கால்களில் வெற்றிலை விவசாயமானது பல ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது.
சோழவந்தானிலிருந்து ரயில் மூலம் மும்பை, தில்லி, பெங்களூர் வரை வெற்றிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட காலமும் உண்டு.
இதற்காக, தமிழக அரசு சோழவந்தான் நகரில் கூட்டுறவுத் துறையின் சார்பில் வெற்றிலை பயிரிடுவோர் வங்கியும் தொடங்கி வைக்கப்பட்டு, வெற்றிலை விவசாய வளர்ச்சிக்கு பலவிதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் வட்டாரங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த வெற்றிலை பயிர்களில் இலை கருகல், முடிச்சு நோய் ஆகிய நோய்கள் தாக்கப்பட்டு, வெற்றிலை பயிர்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த பயிர் செய்ய விவசாயிகள் பலர், அரசு வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் பயிர் கடன் பெற்றிருந்தனர்.
வெற்றிலை பயிர்களில் நோய் தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டத்தால், பல விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினர்.
சிலர் கடனுக்கு பயந்து இரவோடு, இரவாக வேறு ஊர்களுக்கு சென்றவர்களும் உண்டு. இவ்வாறு விவசாயத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் திருப்பூர், கோவையில் பின்னலாடை தொழிலுக்கும், இன்னும் சிலர் சிவகாசி, திருத்தங்கல்லுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கூலி வேலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
கொரோனாவையொட்டி, கடந்த பல நாட்களாக சோழவந்தான், பேரையூர் பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள்.
கம்பெனிகள் திறந்தாலும், பஸ் போக்குவரத்து தொடங்கிய தாலும், மீண்டும் திருப்பூர், கோவை, சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு பிழைப்பை தேடி செல்ல முற்பட்டுள்ளனர்.
சோழவந்தானைச் சேர்ந்த குமரேசன் கூறியது: சோழவந்தான் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடைபெற்றபோது, எங்களுக்கு வேலையும், நல்ல கூலியும் கிடைத்தது. நோய்தாக்கம் காரணமாக விவசாயம் சுருங்கியதால், வேலையின்றி, திருப்பூர் பனியன் கம்பெனியில் குடும்பத்துடன் சென்று தங்கி பணிபுரிகிறேன். விழா காலங்களுக்கு மட்டும் நான் ஊருக்கு வருவேன் என, கண்ணீர் மல்க கூறினார்.
செய்தி :ரவிச்சந்திரன் , மதுரை



