
பாஜக., சார்பில் தேஜகூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் தேர்வை அரசியலாகப் பார்க்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து…
அம்பேத்கர் சிந்தனையில் இருந்து இவர் (ராம்நாத் கோவிந்த்) எப்படி மாறுபட்டவர்
என்று எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியவர். அவர்
மனதிலும் மத சிந்தனைதான் இருந்தது. எந்த இடத்திலும் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டாக
மாறவில்லை. சமூக விடுதலைக்காக மதத்தைத்தான் தழுவச் சொன்னார் அம்பேத்கர்.
ரஷ்யா, சைனா, கியூபாவைப் போல, புரட்சி செய்யச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்
என்பதை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ராம்நாத்தை நான்
இந்தியனாகத்தான் பார்க்கிறேன்.
நான் அறிந்தவரையில், இந்து என்ற மதம் என்றைக்குமே இருந்ததில்லை.
கிறிஸ்துவத்தைத் தழுவக் கூடியவர்கள் கிறிஸ்துவர்களாவும் அல்லாவை
பின்பற்றுகின்றவர்கள் இஸ்லாமியர்களாகவும் இருக்கிறார்கள். புத்த மதத்தைச்
சேர்ந்தவர்கள் புத்திஸ்ட்டுகளாகவும் ஜைன மதத்தினர் ஜைனர்களாகவும்
இருக்கின்றனர். இந்து மதத்துக்கு எந்தக் கடவுளைக் குறிப்பிட்டு சொல்ல
முடியும்? அப்புறம் எப்படி அவரை ஓர் இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்?
ஒற்றைக் கடவுளைத் தொழக் கூடியதாக இந்து மதம் இல்லை. இந்த மண் சார்ந்த கலை,
கலாசார பண்பாட்டைத்தான் அவர்கள் வேறு வழியில் சொல்கிறார்கள். நாம் ஏன்
வெளிநாட்டுக் கடவுளை வணங்க வேண்டும்? உள்நாட்டில் உள்ள கருப்பனையோ சுப்பனையோ
சுடலைமாட சாமியையோ ஏன் வழிபடக் கூடாது? இது சுதேசி என்ற சிந்தனையில் இருந்து
எழக் கூடிய ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இந்து என்பதை கட்டமைக்கப்பட்ட மதமாக
நான் பார்க்கவில்லை.
ராம்நாத் ஒரு சுதேச சிந்தனையாளர். கே.ஆர்.நாராயணனுக்கும் ராம்நாத்
கோவிந்துக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மலைக்கும் மடுவுக்கும் நடுவில்
உள்ள வித்தியாசம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. ஒருவர் அந்தப் பதவியில்
வந்து அமர்ந்த பிறகுதான், இந்த வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். கடந்த
மூன்று மாத காலமாக, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள்
கசிய ஆரம்பித்தபோது, ‘ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நிறுத்தப்
போகிறார்கள்’ என்றுதான் தகவல் பரவியது. இப்போது அந்தத் தகவல் அடிபட்டுப்
போய்விட்டது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு
முறைக்கும் மேல் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார்கள். தலித் சமூகத்தில்
நாராயணனுக்கு அந்த வாய்ப்பு வந்தது. தற்போது பா.ஜ.க அரசில் அவர்களாக
முன்வந்து, பிரபலம் இல்லாத, ஒரு சாதாரண தொண்டனை வேட்பாளராக
முன்னிறுத்தியுள்ளதை நாம் வெளிப்படையாக பாராட்ட வேண்டும். அதில் குற்றம்
கண்டுபிடிக்க என்ன இருக்கிறது? அவர் இரண்டு முறை மேலவை உறுப்பினராக
இருந்திருக்கிறார். ஐ.நா வரை சென்றிருக்கிறார். மிகுந்த அடக்கமான, விசுவாசமான
தொண்டராக இருந்திருக்கிறார்.
ஜனநாயகத்தில் ஒன்றுக்கு அடுத்து இரண்டு என்ற நிலையை மாற்றி, இவரைப் போல்
ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு முன்னிறுத்தியதைவிட வேறு என்ன வேண்டும்?
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற வார்த்தை இப்போதுதான்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
‘பா.ஜ.க ஆட்சியில் மேலாதிக்க சிந்தனைதான் இருக்கும். சாதாரண மக்களை
அங்கீகரிக்க மாட்டார்கள்’ என்ற சிந்தனை தகர்க்கப்பட்டிருக்கிறது. ‘இன்னும்
சாதாரணமானவர்களைக்கூட நாங்கள் முன்னேற்றுவோம்’ என மோடி சொல்வதை நாம்
பாராட்டியே தீர வேண்டும். இதில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை.
பா.ஜ.க.வுக்குள் ஒரு சமூக மாற்றம் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அதாவது, புதிய கெமிஸ்ட்ரி ஏற்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இதை
ஒரு புதிய பரிணாமமாகப் பார்க்கிறேன். மோடியின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள
முற்போக்குப் பொறியாகத்தான் பார்க்கிறேன். ராம்நாத் முன்னிறுத்துப்படுவதை
அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் வரவேற்க வேண்டும். தலித்துகளுக்கு
எதிராக பா.ஜ.க அரசு செயல்படுகிறது எனச் சிலர் பேசுகிறார்கள். ஒரு கட்சி
திட்டமிட்டு தலித்துகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்பில்லை. பா.ஜ.க.வின்
ஆட்சியைப் பயன்படுத்தி, சில அமைப்புகள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சில
சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம். பா.ஜ.க என்ற கட்சி இதுபோல் செயல்படுவதற்கான
வாய்ப்புகளே இல்லை” என்றார் உறுதியாக.



