
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது பொறியாளர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் 3 முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயது கட்டுமான பொறியாளர் சென்னையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் கடந்த வாரம் சென்னையில் இருந்து வேன் மூலம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் அவரை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இம்மாதம் 6-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால் 7-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டுவரப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து காலை 8 மணியளவில் அவரது உடல் தூத்துக்குடி மையவாடியில் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 10-ம் தேதி தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த 72 மூதாட்டி, மே 15-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த 34 வயது லாரி டிரைவர் ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆவர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குடல் அழற்ச்சி அறுவை சிகிச்சைக்காக வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞரை பரிசோதித்தன் மூலம் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மருத்துவர்கள், மருத்துவ, மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 400-ஐ தாண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 397 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளையில் சென்னையில் இருந்து வருவோருக்கு, இங்கு வந்து 14 நாட்களுக்குள் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவர்களது பெயர் சென்னை பட்டியலுக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.