
- மண்டலங்களுக்குள் பஸ்கள் இயங்குவதால் துண்டிக்கப்பட்ட கடைக்கோடி மாவட்டங்கள்!
- கூட்டம் குறைவால் ஓரங்கட்டிய தனியார் பேருந்துகள்…
கொரோனா வைரஸ் தொற்று, மக்களை தனிமைப் படுத்தியதோ இல்லையோ, போக்குவரத்திற்காக பிரிக்கப்பட்ட மண்டலங்களால், தென் மாவட்டங்களின் கடைக்கோடியான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மூன்று மாவட்டங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரையும் லட்சக்கணக்கானோர் தினசரி சென்று வருவார்கள். தொற்று காரணமாக தென்மாவட்டங்கள் இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டன. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மண்டலமாக அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளுக்காக, இராஜபாளையம் தாண்டி தென்காசி மாவட்டத்திற்கும், சாத்தூர் தாண்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கும், செவல்பட்டி தாண்டி திருநெல்வேலி மாவட்டத்திற்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்களுக்கு வேலைக்கு வரும் கோவில்பட்டி, சங்கரன்கோவில், முகவூர் பகுதி தொழிலாளர்கள் இரண்டு பேருந்துகள் மாறி, இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர்கள் நடந்து, மாவட்ட எல்லைக்குள் வரவேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் மக்களுக்கு அலைச்சலுடன், கூடுதலாக பணமும் செலவாகிறது.
ஏற்கெனவே தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் இந்த நிலை கூடுதல் மன உளைச்சலைத் தருகிறது. இன்று ஞாயிறு கிழமை தொழிற்சாலைகள் விடுமுறை என்பதால், பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

காலையில் இயங்கிய தனியார் பேருந்துகளும், மக்கள் கூட்டமில்லாததால் ஓரங்கட்டி நிறுத்திவிட்டனர். அரசுப் பேருந்துகளை இயக்கிய அதிகாரிகள், வழக்கம் போல பேருந்துகளில் மக்கள் முழுவதும் ஏறிய பின்பும், சில இடங்களில் மக்கள் நெறுக்கியடித்து நின்று கொண்டு பயணிக்கும் நிலையில் இயக்கப்பட்டன.
இதனால் மக்கள் ஒருவிதமான அச்சத்தில் தான் பயணம் செய்கின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை