மின் கட்டணம் குறித்த வழக்கு! அரசு விரிவான அறிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Published:

eb bill

மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியாகக் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இதில் அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்து விட்டு, மீதத் தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அவரது மனுவில், ‘முன்பு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் யூனிட் அளவில் கணக்கிடாமல், முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம், 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறிய செயல்.

மின்சார வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.

நான்கு மாதங்களுக்குச் சேர்த்து கட்டணம் நிர்ணயிப்பதால், 500 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு வரும்போது, அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் 500 யூனிட்களுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 96 சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ‘மின் கட்டணத்தை யூனிட் அளவில் கணக்கிடாமல் ஒட்டுமொத்தமாக 4 மாதமாகக் கணக்கிடுவதால் கூடுதலாகப் பணம் செலுத்தும் நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். 2 தனித்தனி மாதங்களாகக் கணக்கிட்டுப் பணம் வசூலிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அரசுத் தரப்பில் பதிலளித்த அரசு வழக்கறிஞர், ‘மின் கட்டண நிர்ணயம் சரியான முறையில் செய்யப்பட்டு வருகிறது, அதைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்கிறோம். அதுவரை நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது’ எனக் கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் டான்ஜெட்கோவுக்கு உத்தரவிட்ட நீதிபதி அமர்வு வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related articles

Recent articles

spot_img