
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது. ஆசனூர் வனப்பகுதில் பெங்களூரு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஒற்றைக் காட்டு யானை வழிமறித்தது. சிறிது நேரம் அங்கேயே நின்ற யானை, சாலையை விட்டு நகர மறுத்தது. பின்னர், வனப்பகுதியில் நுழைந்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே போல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த ஒரு மாதமாகவே யானைகள் நுழைந்து விளை நிளங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவும், ஊமப்பாளையம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அவை, தங்கவேல் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.
இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த, நேந்திரன், கதிலி உள்ளிட்ட வாழை மரங்களை யானைகள் சாய்த்ததால், இழப்பு ஏற்பட்டுள்ளது.
யானைகளால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தோட்டங்களுக்குள் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



