கொரோனா பரவல் வேகம் அதிகம்! மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
autos in madurai
autos in madurai

கொரோனா வைரஸ் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ள நிலையில், மதுரையில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மதுரையில்  நாளை நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை, 7 நாட்களுக்கு முழுஊரடங்கு பிறப்பிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

இந்த முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் முழு ஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கும்கூட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படுவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக பரவலை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிக்க அரசு அதிகாரிகள், போலீஸ் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மதுரை பஸ் நிலையங்களில் முகக் கவசம் அணியாமல் ஹாயாக  வலம்  வந்த பலரும் மாட்டிக் கொண்டு அபராதம் ரூ. 200 கட்டினர்..சிலர் அதிகாரிகளிடம் எக்ஸ்கியூஸ் கேட்டனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மசியவில்லை. ஆனால், மதுரை புறநகர் பகுதிகளில் பலர் முகக் கவசம் அணியாமலே வலம் வருகின்றனர்.

  • செய்தி :ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.