
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் கடைகள் வைத்திருக்கும் ‘மர்ம’ கும்பல்கள் ஈடுபடும் முறைகேடுகள் குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை செய்திகள் பல வெளிவந்துள்ளன. தற்போது மேலும் ஒரு செய்தி இந்த ‘மர்ம’ கும்பல்களின் கைவரிசைக்கு வலு சேர்த்திருக்கிறது!
என் அந்தரங்க வீடியோக்களைக் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி பணம் கேட்டு செல்போன் ரீசாஜ் கடையில் வேலை பார்க்கும் சகாபுதீன் மிரட்டுகிறார் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-வருண்குமாரிடம் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் புகார் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.பி வருண்குமார், அந்தப் பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண், என் கணவர் என்னிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன். ஒரு நாள் நான் எங்கள் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றிருந்தேன்.
அப்போது அந்தக் கடையில் வேலை பார்த்த சகாபுதீன் என்பவரிடம் மொபைல் ரீசார்ஜ் செய்யச் சொல்லி, என் செல் நம்பரைக் கூறினேன். சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய சென்ற போது, எதற்காக அலைந்து திரிந்து வருகிறீர்கள். உங்கள் மொபைல் போனில் ஒரு ஆப் இன்ஸ்டால் செய்து தருகிறேன். நீங்கள் வீட்டில் இருந்த படியே ரீசார்ஜ் செய்யலாம் என்றெல்லாம் கூறி, என்னிடம் அன்பாக பேசத் தொடங்கினார்.
நானும் அவரிடம் என் மொபைல் போன் கொடுத்தேன். தொடக்கத்தில் மிகவும் டீஸண்டாக பேசிய அவர், என்னுடைய நிலையை தெரிந்து கொண்டு, மிகவும் நெருக்கமாகப் பேசினார். திடீரென ஒரு நாள் என் மொபைல் போனில் என் அந்தரங்க போட்டோ வீடியோக்கள் வந்தன. நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் அதை வைத்தே என்னை மிரட்டினார். ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதை உண்மையென நம்பி அவருடன் நெருங்கிப் பழகினேன்.
நானும் அவரும் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு செல்வோம். அங்கு இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருப்போம். அதை எனக்குத் தெரியாமல் சகாபுதீன் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோக்களை எனக்கு அனுப்பி ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுகிறது.

பணம் கொடுக்கவில்லை என்றால் உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்பில் அந்த வீடியோக்களை பதிவு செய்து விடுவதாகக் கூறுகின்றனர். அப்படியொரு நிலை ஏற்பட்டால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை… என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதை அடுத்து இது குறித்து விசாரிக்க சகாபுதீன் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய கும்பலின் செல்போன் எண்களையும் ஆன்லைன் மூலம் புகாராகப் பெற்றுள்ளார் எஸ்.பி வருண்குமார். தொடர்ந்து, சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் அவர்கள் குறித்து விசாரணையை தொடங்கினார்.
தொடர்ந்து அந்தப் பெண் கூறிய ரீசார்ஜ் கடைக்கு போலீஸார் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த கம்ப்யூட்டர்களிலும் சகாபுதீனின் செல்போன்களிலும் இருந்த ஆபாச வீடியோக்களைப் பார்த்து போலீஸார் அதிர்ந்தனர். அது தொடர்பாக சகாபுதீனிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்கு தெரியவந்தது.
ராமநாதபுரம் கீழக்கரை மகளிர் போலீஸார் இது குறித்துக் கூறுகையில்…
ஷேக் சகாபுதீன் வேலை பார்க்கும் கடையின் உரிமையாளர் செய்யது அபுபக்கர் பாதுஷா. இந்தக் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்கள் முதல் ஜெராக்ஸ் எடுக்க வருபவர்கள், அரசு உதவித் தொகை விண்ணப்பங்களை வாங்க வருபவர்களிடம் சகாபுதீன் அன்பாக பேசுவார். பின்னர் அவர்களுடன் நட்பாக பழகுவார். தொடர்ந்து அந்தப் பெண்களின் குடும்பச் சூழலை தெரிந்து கொள்ளும் சகாபுதீன், அதன் பின் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

நீங்கள் எதற்கு கடை வருகிறீர்கள். உங்களின் செல்போனில் AnyDesk என்ற மொபைல் ஆப் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு ரொம்பவே யூஸ்புல்லாக இருக்கும் என்பார். அவர் சொல்வதைக் கேட்டு அந்த மொபைல் ஆப்பினை டவுன்லோடு செய்தவர்களின் மொபைல் ரகசிய குறியீடுகளை அறிந்து கொண்டு, தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அவர்களின் மொபைல் போனில் இருந்து போட்டோக்கள், வீடியோக்கள், மெசேஜ்கள், செல்போன் அழைப்பு பதிவுகள் என அனைத்தையும் தான் எடுத்துள்ளார்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அவர்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள், செல்போன் அழைப்பு ஆடியோ பதிவுகளை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி அதிர்ச்சி கொடுப்பார்.
அதை வைத்து சம்பந்தப் பட்ட நபர்களை மிரட்டி, பணத்தை கறப்பார். இவ்வாறு பணத்தை இழந்த பெண்களின் பட்டியல் 100-ஐ தாண்டுகிறது. பெண்களிடம் சந்தோஷமாக இருக்க சகாபுதீன், தான் வேலை பார்த்த கடையிலும் திருடியுள்ளார். அது தொடர்பாக கடையின் உரிமையாளர் பாதுஷாவுக்கும் சகாபுதீனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போதுதான் சகாபுதீன், தன்னிடமுள்ள பெண்களின் ஆபாச வீடியோக்களைக் காட்டி, இதை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கலாம் என்று கூறியுள்ளார். அதன்படி சகாபுதீன், கடையின் உரிமையாளர் பாதுஷா மற்றும் இவர்களின் வெளிநாட்டில் வசித்துவரும் சையத் அலிம் கவுல் ஆகியோர் சேர்ந்து வீடியோவில் இருக்கும் பெண்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர்.
உள்ளூர் செல்போன் நம்பரிலிருந்து ஆபாச வீடியோக்களை அனுப்பினால் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து, முன் எச்சரிக்கையாக வெளிநாட்டிலிருக்கும் சையத் அலிம் கவுல் தரப்பிலிருந்தே வீடியோக்களை அனுப்பியுள்ளனர்… என்று கூறுகின்றனர் போலீசார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சகாபுதீன், பாதுஷா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர் காவல் துறையினர். கடையிலிருந்து 4 செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக இதே போல் வேறு சில வழக்கு குறித்தும் கூறியுள்ள போலீஸார், ஜெர்மனியில் தங்கி படித்து வந்த கீழக்கரையைச் சேர்ந்த முகமது மைதீன் குறித்தும் விவரித்துள்ளனர்.
கீழக்கரையைச் சேர்ந்த முகமது மைதீன், சமூக வலைதளங்களில் பல பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியுள்ளான்.
குறிப்பாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் வசதியான பெண்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இவனது நண்பர்களான சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகம்மது இப்ரஹிம் நூர், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோரும் பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். அந்தப் பணத்தில் சந்தோஷமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தக் கும்பலிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியுள்ளனர். நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல் ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி மற்றவர்களைத் தேடி வருகிறோம்.
ஜெர்மனியில் தங்கியிருக்கும் முகமது மைதீன்கானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். பெண்களை ஏமாற்றும் கும்பல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் 94899 19722 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்” என்கின்றனர்.
AnyDesk செயலி குறித்து சைபர் க்ரைம் போலீஸாரும் எச்சரிக்கின்றனர். AnyDesk செயலி ஒரு The Fast Remote Desktop Application. அதன்மூலம் மற்றவர்களின் தரவுகளை திருட வாய்ப்புள்ளது. இதுபோல ஆயிரக்கணக்கான செயலிகள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் முதல் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.. என்கின்றனர் போலீஸார்.



