“ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா,
அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே
இல்லையா? (நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)
ஒரு சமயம் சென்னையில் திக்விஜயம் பண்ணிண்டிருந்த மகா பெரியவாவழியில் தி.நகர்ல
இருக்கிற சிவா-விஷ்ணு ஆலயத்துக்கு விஜயம் பண்ணியிருந்தார். அங்கே சுவாமி
தரிசனம் முடிஞ்சதும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போறதாக
திட்டமிட்டிருந்தா. அதே மாதிரியே இங்கேர்ந்து புறப்பட்டா.
மகாபெரியவா நடையாத்திரையா போயிண்டு இருந்த
சமயத்துல ஒரு இடத்துல திடீர்னு ஒரு இளைஞன் அவர் முன்னால வந்து நின்னான்.
நெத்திக்கு இட்டுக்காம ஏனோ தானோன்னு இருந்த
அவனுக்கு மகாபெரியவா முன்னால வர்றச்சே காலணியைக் கழட்டிடணும்கற அளவுக்கு கூட
மரியாதை தெரியலை.அல்லது நாம எதுக்கு மரியாதை
எல்லாம் தரணும்னு நினைச்சானோ தெரியாது.
அவன் வந்து நின்ன விதமே வம்படியா ஏதோ பிரச்னை
செய்யப்போறான்கற மாதிரி தெரிஞ்சதால,சுத்தி இருந்த
பக்தர்களும், காவலுக்கு வந்திருந்த ஜவான்களும்
அவனைத் தடுக்கப் பார்த்தா. ஆனா, அவன் அதையும்
மீறித் திமிறிண்டு வந்து பெரியவா முன்னால் நின்னான்.
எல்லாரும் திகைச்சு நிற்க,பெரியவாளோ அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாக புன்னகை
புரிஞ்சார்
“காஞ்சிபுரத்துல இருக்கிற சங்கராசார்யார் சாமியார்னு
சொல்றாங்களே,அது நீங்கதானா?” கொஞ்சம் கூட
இங்கிதமோ, மகாபெரியவாகிட்டே பேசறோம்கற
எண்ணமோ இல்லாம கேட்டான் அவன்.
“என்னைப்பத்தி விசாரிக்கறது இருக்கட்டும். மொதல்லே
நீ யாரு?என்னங்கறதைச் சொல்லு!” கொஞ்சமும் கடுமை
இல்லாம அன்பாகவே கேட்டார் பெரியவா.
தன் பெயரைச் சொன்ன அவன்,”நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே!”
அப்படின்னான்.
“என்னைப்பத்தி நீ எதுக்கப்பா விசாரிக்கறே?” “இல்லை.மடாதிபதின்னு
சொல்லிக்கிட்டு வேலைவெட்டி எதுவும் செய்யாம ஊர் சுத்தறதும், உபதேசம் பண்றதுமா
திரிஞ்சுக்கிட்டு இருக்கிறதால என்ன பிரயோஜனம்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்!”
“அதெல்லாம் உபயோகமில்லாத வேலைன்னு உனக்கு
யாரு சொன்னா?” வினாவாகவே தொடர்ந்தது சம்பாஷணை.
“கேட்டதுக்கு பதில் சொல்லாம எதிர்க்கேள்வியாவே கேட்டுக்கிட்டு
இருக்கறீங்களே.உங்ககூட பேசிக்கிட்டு
இருக்க எனக்கு நேரம் இல்லை.நான் வேலைக்குப் போயாகணும்!” சொன்ன இளைஞன்,”இந்த
மதம்,கோட்பாடு, சாஸ்திரம்,சம்பிரதாயம்,சாமியெல்லாம் யாரு உண்டாக்கினாங்கன்னே
தெரியலை….அதையெல்லாம் நம்பிக்கிட்டு…..வேறவேலையில்லாம ..!” வார்த்தைகளை
முடிக்காமல் கொஞ்சம் சத்தமாகவே முணங்கினான்.
ஆசார்யா ஒரு நிமிஷம் அவனை உத்துப்பார்த்தார்.
“அவசரமா உத்யோகத்துக்குப் போயிண்டு இருக்கே போல இருக்கு.எங்கே வேலைபார்க்கறே?”
கேட்டார்.
‘பின்னே வெட்டியாவா சுத்தமுடியும்.மாசாந்தர உத்யோகம்தான்.கிண்டியில் ஆபீசு!”
அலட்சியமாகச்
சொன்னான்
“ஓ…கிண்டியில இருக்கா ஒன்னோட அலுவலுகம்? அதுக்கு இந்தப் பாதையில ஏன் போறே?”
தெரியாதவர் மாதிரி கேட்டார் பெரியவா.
“பின்னே.இதுதானே கிண்டிக்குப் போற பாதை.
இதுலேதான் போகமுடியும்.
“அப்படியா இந்தப்பாதை கிண்டிக்குப் போறதா யார் உனக்கு சொன்னா? இந்தப் பாதையைப்
போட்டவாளை ஒனக்குத் தெரியுமா?
“நல்லா கேட்டீங்க.இந்தப் பாதையிலதான் நான் தினமும் போயிட்டு வரேன். இதைப்
போட்டவங்க யாருன்னு யாருக்குத் தெரியும். எம் முப்பாட்டங்க காலத்துல யாரோ
போட்ட ரோடு. பாதை சரியா இருக்கிறதா தெரிஞ்சுது; போயிட்டு இருக்கேன்!”
சொன்னவனைப் பார்த்து மெதுவா புனகைச்சார் பெரியவா.
“இந்தப் பாதையை யார்போட்டதுன்னு ஒனக்குத் தெரியாது.
ஆனா,இது சரியானபாதை.இதுல போனா எந்த இடத்துக்குப்
போகலாம்னு தெரிஞ்சிருக்கு. அதனால நீ இந்த வழியா போறே அப்படித்தானே?”
“அட…நான் சொன்னதையே திருப்பிச்சொல்லி அதானேன்னு கேட்கறீங்க? நான் போறதுக்கு
மட்டும் இந்த ரோடு இல்லை. யார் கிண்டிக்குப் போகணும்னாலும் இதே பாதைதான்.
யாராவது என் கிட்டே கேட்டாலும் இதே வழியைத்தான் காட்டுவேன்”–கொஞ்சம்
சிடுசிடுப்பாகவே சொன்னான் அவன்.
“ரொம்ப சரியா சொன்னே.ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த
வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே
இல்லையா? அதைத்தானே நானும் பண்ணறேன். இந்த மதம், சாஸ்திரம், ஆசாரம்,அனுஷ்டானம்
இதெல்லாம் யார் உருவாக்கினான்னு எனக்கு தெரியாது. ஆனா, இதெல்லாம் சரியான
இடத்துக்குப் போறதுக்கான பாதைன்னு எனக்கு முன்னால இருந்தவா வழிகாட்டி
இருக்கா.அதை நம்பிண்டு நான் போறேன்.அதையே மத்தவாளுக்கும் வழியாக்
காட்டறேன்.எந்த வழி நல்லதுன்னு தேடித்தேடிப் பார்த்து மத்தவாளுக்கு வழிகாட்டற
வேலை என்னுது. அதை நான் சரியா பண்ணிண்டு இருக்கறதா நினைக்கிறேன்!” அமைதியாக
சொல்லி முடித்தார் பெரியவா.
சட்டுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் காலணியைக் கழட்டி
விட்டுட்டு வந்த அந்த இளைஞன், நடுரோடுனுகூட பார்க்காம
அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா பாதத்துல விழுந்தான்.
என்னை மன்னிச்சுடுங்க சாமீ.தெரியாத்தனமா உங்களைப் பத்தி தப்பா பேசிட்டேன்!”
அப்படின்னு சொல்லி அழுதான்.
அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி வந்து பரமாசார்யாளை
தரிசனம் பண்ணறதை வழக்கமா வைச்சுண்டு இருந்தான் அந்த இளைஞன்.




