
பாட்னா:
நிதிஷ் குமார் பீகார் மக்களை ஏமாற்ற மட்டுமில்லை, முதுகிலேயே குத்திவிட்டார் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
ரயில்வேக்குச் சொந்தமான ஹோட்டல்கள் குத்தகைக்கு விடப்பட்டதில் ஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவுசெய்தது. அதில் பீகார் மாநில துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பெயர் இடம்பெற்றது. இதையடுத்து, பீகாரில் துவங்கப்பட்ட மகா கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. தேஜஸ்வியை விளக்கம் கேட்டார், குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை பதவி விலகக் கோரினார். எதுவும் நடக்கவில்லை. இதனால், பீகார் மாநில முதல்வர் பதவியை நிதிஷ் குமார் நேற்று ராஜினாமா செய்தார். அதே சூட்டோடு, மீண்டும் பாஜக.,வுடன் கூட்டணியைத் தொடர்ந்தார். பாஜக., ஆதரவுடன் மீண்டும் இன்று முதல்வராகப் பொறுப்பேற்றார்.
பீகாரில் சிரமப் பட்டு உருவாக்கிய மகா கூட்டணியில் இருந்து விலகி பாஜக.,வுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளதை, லாலு பிரசாத் யாதவ், கடுமையாக விமர்சித்துள்ளார். நிதிஷ் குமார் மீது கடும் கோபத்திலுள்ள அவர், நிதிஷ் குமார் பீகார் மக்களை ஏமாற்ற மட்டும் செய்யவில்லை, முதுகிலேயே குத்திவிட்டார் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், “பாஜக., உடனான நிதிஷ் குமாரின் கூட்டணி ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டதுதான். இவை அனைத்தும் பாஜக., மாநிலத் தலைவர் சுஷில் குமார் மோடியின் வியூகம்தான். அவர் ஏற்கெனவே என் மீதும் என் குடும்பத்தார் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வந்துள்ளார். இப்போது நடக்கும் செயல்கள் அனைத்தும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டதுதான்” என்று கூறினார் லாலு பிரசாத் யாதவ்.
நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரான மாநிலங்களவை எம்.பி. ஆர்சிபி சிங்கையும் விமர்சித்துள்ளார் லாலு. “நிதிஷ் குமார், ஆர்சிபி சிங்கின் அறிவுரைப்படி செயல்படுகிறார். அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது நிதிஷ் குமாருக்கு இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். பாஜக.,வுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தால் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என ஆர்சிபி சிங் தன் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்” என்று திட்டித் தீர்த்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஆனால் நான் உச்ச நீதிமன்றம் செல்வேன். பீகாரில் அதிக எம்.எல்.ஏ.க்களை உடைய ராஷ்டீரிய ஜனதா தளக் கட்சியைதான் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டும். உங்களுக்கு எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தெரிந்திருக்கும். நான் தில்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் உள்ளேன். ஊழல் குற்றச்சாட்டுக்கள் வழியாக லாலுவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோத்துள்ளார். நிதிஷ் குமாரே கொலை வழக்குக் குற்றவாளிதான்”
“நிதிஷ் குமார் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி. பீகார் மாநில மக்கள் தேர்தலில் கொடுத்த வெற்றியானது பாஜக.,வுக்கு எதிரானது. மோடி மற்றும் அமித்ஷாவை வெளியேற்றக் கிடைத்த வெற்றி. நான் பேராசைக்காரன் என்றால் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கியிருக்க மாட்டேன். நிதிஷ் குமார் என்னிடம் பாஜக.,வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனக் கூறி ஏமாற்றிவிட்டார்.”
“அமித்ஷா சிறப்பான தலைமை செய்தி ஆசிரியர். செய்திகள் எப்படி ஒளிபரப்பாக வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார். அமித்ஷா மீடியா உரிமையாளர்களிடம் பேசுகிறார். அவர்கள் செய்தி ஆசிரியர்களிடம் பேசுகின்றனர். இது செய்தியாளர்களின் தவறு இல்லை” என்றார் லாலு பிரசாத் யாதவ்.
இதே போல், துணை முதல்வர் பதவி வகித்த தேஜஸ்வி யாதவ், தனது டுவிட்டரில் நிதிஷ் குமாரை கடுமையாகச் சாடியுள்ளார். மக்கள் முட்டாள்கள் இல்லை எனவும், அதிகாரத்திற்கான பேராசை, அதன் சொந்த அழிவை வெளிப்படுத்தும் எனவும் நிதிஷ் குமாரின் சந்தர்ப்பவாத அரசியலை இந்தச் செயல் வெளிக்காட்டுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனிடையே பாஜக., ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி யேற்றதில், அக்கட்சித் தலைவர் சரத் யாதவுக்கு உடன்பாடு இல்லை எனக்கூறப்படுகிறது. நிதிஷ் குமார் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது முதல் தற்போது வரை, சரத் யாதவ் எந்தக் கருத்தையும் கூறாமல் மௌனமாக இருந்து வருகிறார். இன்று ஆறாவது முறையாக முதல்வராக நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்ட விழாவிலும் சரத் யாதவ் கலந்து கொள்ளவில்லை.



