
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஷ்வரம் சென்றார். அங்கிருந்து குண்டுதுளைக்காத கார் மூலம் பேய்க்கரும்பு பகுதிக்குச் சென்றார் மோடி.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் தற்போது மிகப் பொலிவுடன் திகழ்கிறது. அப்துல்கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை, பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10 மணியளவில் மதுரை வந்தார். மதுரை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றார். ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, பின்னர் கார் மூலம் பேய்க்கரும்பு பகுதிக்குச் சென்றார்.
பின்னர், அப்துல் கலாம் நினைவு மண்டபத்தின் முன்னர் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அவர் மண்டபத்தின் ரிப்பன் கத்திரித்து திறந்துவைத்தார். உள்ளே கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையைத் திறந்துவைத்து, மண்டபத்தில் கலாம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் மாதிரிகள், புகைப்படங்கள், வெவ்வேறு மெழுகுச் சிலைகள், உலகத் தலைவர்களுடன் கலாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கட் அவுட்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.





