சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியிலிருந்து படைகள் வெளியேறாவிட்டால்,
இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறிய அளவிலான யுத்தத்தை நடத்துவோம் என சீனா
எச்சரித்துள்ளது.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான
டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள்
தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு
அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
கடந்த ஜூன் மாதம் மத்தியில் எழுந்த பதற்றத்தை தொடர்ந்தும், சீனாவின் எல்லை
ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், சீனாவின் பல்வேறு மிரட்டல்களை தாண்டி
இந்தியா, தனது துருப்புகளை அங்கு குவித்திருக்கிறது.
இந்த நிலையில், டோக்லாமில் உள்ள இந்திய ராணுவ துருப்புகளை அகற்றுவதில் குறியாக
உள்ள சீனா, சிறிய அளவிலான போர் முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்
வெளியாகியிருக்கிறது.
சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ்-ல், பெய்ஜிங் சர்வதேச உறவுகள்
கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஹூ ஜி-யோங்(Hu Zhiyong) எழுதியிருக்கும்
கட்டுரையில், இந்திய ராணுவத்தை டோக்லாமில் இருந்து அகற்ற, இரண்டு
வாரங்களுக்குள் அங்கு சிறிய அளவிலான போர் முன்னெடுக்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான யுத்தத்தை முன்னெடுக்கும் முன்பாக, இந்திய
வெளியுறவுத்துறையிடம், சீன தரப்பில் இருந்து கண்டிப்பாக தகவல்
தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அண்மை காலமாக, சீனாவுடன்
மோசமான வெளியுறவு கொள்கையை இந்தியா கடைபிடித்து வருவதாகவும், இதனால், எல்லை
பிரச்சினை தீர்க்கப்படாமல் வளர்ந்து கொண்டே போவதாகவும், சீன அரசாங்கத்தின்
அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்சில் வெளியாகியிருக்கும் கட்டுரையில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம்,
அனைத்து கட்சிகளும், டோக்லாம் விவகாரத்தை அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே பேசித்
தீர்க்க முடியும் என்று கூறி வரும் நிலையில், அதற்கு நேர் எதிரான
நிலைப்பாட்டிற்கு சீனா தயாராகி வருகிறது.
இந்தியாவை மீண்டும், மீண்டும் சீண்டிப்பார்க்கும் விதமாக கருத்துத் தெரிவித்து
வந்த சீனா, தற்போது, ஒருபடி மேலேபோய், இந்தியாவிற்கு எதிராக சிறிய அளவிலான
யுத்தத்தை முன்னெடுக்கப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தியால், ஏற்கனவே
பதற்றத்தால் சூழப்பட்டிருக்கும் டோக்லாம் பீடபூமியில், மேலும் பதற்றம்
அதிகரித்திருக்கிறது.



