
சென்னை:
அதிமுக.,வின் பிளவு பட்ட இரு அணிகள் ஒன்றிணைந்தன என்று கூறப்பட நிலையில், இன்றும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில்தான் திகழ்கிறது அதிமுக! தினகரன் அணி என தனியாக 19 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவதால், ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கிக் கொண்டிருப்பதால், இப்போது எது உண்மையான அதிமுக என்பதில் குழப்பம் நீட்டித்து வருகிறது.
டிடிவி தினகரன் இன்று கட்சியில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அமைச்சர்கள் சிலரை நீக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயலலிதாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்ட தங்களை நீக்க, தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அமைச்சர்கள் எதிர்வாதம் செய்திருக்கின்றனர்.
மேலும், தினகரனை நாங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்பதால், அவர் வெளியிடும் அறிவிப்புகளுக்கு எந்த பலனும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர்.
இதனிடையே, தினகரன் அணியினர் சபாநாயகர் தனபாலை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவே சபாநாயகரை முதல்வர் ஆக்க வேண்டும் என்று சொல்கின்றனர் என அதிமுகவினர் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக வைத்தியலிங்கம் கூறியபோது, சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுப்போம், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான், எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறிய வைத்தியலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கியதாக தினகரன் கூறியிருந்தார். இதை அடுத்து தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்துக்கும் சசிகலா அணியினருக்கும் இடையே இன்று அடிதடி ஏற்பட்டது. இரு தரப்பும் மற்றவர் உருவ பொம்மைகளைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இன்று தினகரன் சார்பில் சசிகலாவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அறிவிப்பில், பலரை கட்சியை விட்டுநீக்கியுள்ளார் தினகரன்.
அந்த அறிவிப்பு!
கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிப்பு!
கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலை எம்எல்ஏ நியமனம்-
திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கம்; புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம்!
தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செந்தமிழன் நியமனம்!
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி விடுவிப்பு; புதிய செயலாளராக எம்எல்ஏ பாலசுப்பிரமணி நியமனம்!
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து விடுவிப்பு; புதிய செயலாளராக பரணி கார்த்திகேயன் நியமனம்…
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கோதண்டபாணி நியமனம்!
அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் விடுவிப்பு; திருவான்மியூர் முருகன், குடவாசல் ராஜேந்திரன் மற்றும் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் நியமனம்!



