
மும்பை:
சுமார் 9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின்னர் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் புதன்கிழமை இன்று நவி மும்பைக்கு அருகில் உள்ள டலோஜா சிறையில் இருந்து வெளிவந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த புரோஹித், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து இன்று வெளியில் வந்தார்.
இன்று முற்பகல் 10.45 மணி அளவில் சிறையில் இருந்து வெளியில் வந்த புரோஹித், காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ராணுவ போலீஸார் மற்றும் ராணுவ பாதுகாப்புப் படையின் உடனடி செயலாற்றும் குழுவினர் புரோஹித்தை தெற்கு மும்பையில் உள்ள கலோபா ராணுவ நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
2008 செப்.29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட புரோஹித் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக நேற்று புரோஹித் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் எனது ராணுவ சீருடையை மீண்டும் அணிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது எனது உடலின் உள் தோலைப் போன்றது. உலகத்திலேயே மிகச்சிறந்த அமைப்பான இந்திய ராணுவத்தின் சேவைக்கு மீண்டும் நான் செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார் புரோஹித்.
எனக்கு இரண்டு குடும்பங்கள். ஒன்று ராணுவம், அடுத்தது என் தாய், மனைவி, இரு மகன்கள், ஒரு சகோதரி அடங்கிய குடும்பம். நான் அவர்களுடன் திரும்பிச் செல்ல இனியும் காத்திருக்க முடியாது என்று கூறிய புரோஹித், ராணுவம் என்னைக் கீழே தள்ளிவிடாது என்றும் உறுதிபடக் கூறினார்.
புரோஹித் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை ஏடிஎஸ், மற்றும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., இரண்டும் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்களைப் பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.



