arlakshmanan
arlakshmanan

நெஞ்சுவலி காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தமது 78 ஆவது வயதில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று (ஆக.,26) இரவு 11 மணி அளவில் திருச்சி தனியார் மருத்துவமனையில் ஏ.ஆர்.லட்சுமணன் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் தேவகோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று முற்பகல் 11 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஏ.ஆர்.லட்சுமணன், சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் இவரே.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவர், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவருக்கு ஏ.ஆர்.எல்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி என 2 மகள்களும் உள்ளனர். இவரது மகன் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் உள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான், (செவ்வாய்க்கிழமை) அவரது மனைவி மீனாட்சி ஆச்சி (76) உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending