
தர்மபுரி அருகே பஞ்சாயத்து நிதியில், 20 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த, செயலர், அவரது நண்பரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் மஞ்சவாடி பஞ்., செயலராக பணியாற்றியவர் கருணாகரன், 51; இவரது நண்பர் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த குமார், 41; இருவரும் பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அலுவலக போலி முத்திரை தயாரித்து, காசோலையில் போலி கையெழுத்திட்டு, 2017 முதல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
2019 முதல் அலுவலகம் வருவதை கருணாகரன் தவிர்த்துள்ளார். இதுகுறித்து பி.டி.ஓ., கிருஷ்ணன், தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார், தர்மபுரி எஸ்.பி., ராஜனிடம் புகாரளித்தார்.
இதையடுத்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கருணாகரன், போலீசார் விசாரித்தனர். இதில், கருணாகரன், குமாருடன் சேர்ந்து, போலி முத்திரை மற்றும் ஆவணங்கள் தயாரித்து, 20.14 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.
அவர்களது வீட்டிலிருந்த போலி அரசு முத்திரை, ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
கருணாகரன் முறைகேட்டில் ஈடுபட்ட காலத்தில் பணியாற்றிய பி.டி.ஓ.,க்கள் உட்பட, இத்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளிடமும், விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
2வது முறையாக மஞ்சவாடியை சேர்ந்த கருணாகரன், அதே பஞ்.,ல் செயலராக பணிபுரிந்தார். கடந்த, 2007ல், அப்போதைய பஞ்., தலைவருடன் சேர்ந்து, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இதனால் சஸ்பெண்டான அவர், உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, அதே பஞ்சாயத்தில் பணியை தொடர்ந்தார்.
தற்போது, 20.14 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். மஞ்சவாடி பஞ்.,ல், 2017ல் இருந்து, பி.டி.ஓ., மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோர், கணக்குகளை முறையாக தணிக்கை செய்யவில்லை. இதனால் இவர்கள், கருணாகரன் முறைகேட்டுக்கு உதவிய இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.