
சீர்காழி அருகே திருடுபோன கோயில் விக்ரகங்களைக் கண்டுபிடித்து மீண்டும் பூஜைகள் நடத்தப்பட வழி செய்ய வேண்டும் என்று கோரி, இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாடம் நடைபெற்றது.
இது குறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் தெரிவித்த போது… சீர்காழி தாலுகா கொண்டல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமையான பல்வேறு சிறப்புகளையுடைய “கீழ் பழனி ” என அழைக்கப்படும் ஸ்ரீ குமார சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் முருகன், வள்ளி மற்றும் தெய்வானை உள்ளிட்ட சுவாமி சிலைகள் திருடு போய்விட்டன.
400 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட சுமார் 100 கிலோ எடையுள்ள இந்த பஞ்சலோக சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். சிலை திருட்டு தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. (குற்ற எண்: 53/2020)
ஆறு மாத காலமாகியும் சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்படாதது பக்தர்களையும், கிராமவாசிகளையும் வேதனையடைச் செய்துள்ளது.
உற்சவர் சிலைகள் இல்லாமல் கோயில் விழாக்கள் நடைபெற முடியாத சூழல் உள்ளது. மிகச் சிறப்பாக வருடந்தோறும் நடத்தப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டும் நடத்தப்பட வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகவே, தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ள இவ்வழக்கை சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு காவல் பிரிவிற்கு மாற்ற வலியுறுத்தி இன்று 14.09.2020 திங்கட் கிழமை சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்களும், இந்து மக்கள் கட்சி தொண்டர்களும், முருக பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்று பேசினார்.
மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்டத் தலைவர் கறுப்பு, மாவட்ட செயலாளர் அரு.செல்வம், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவீரபாண்டியன், கொள்ளிடம் ஒன்றிய நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராஜேந்திரன், மோகன், சீர்காழி ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், அய்யப்பன், நாகை மாவட்ட பொதுச் செயலாளர் ஆறு பார்த்திபன், ஒன்றிய நிர்வாகிகள் ஜோதிப் பிள்ளை, ஜெயப்பிரகாஷ், செல்வம், சிங்காரவேலு, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் நீலகண்டன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.