
காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனையை அணுக வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், பழங்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட வடக்கு அழகுநாச்சியார்புரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மருத்துவ முகாமில் 70 வயது முதியவர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். அவர் ஏற்கெனவே ஆஸ்துமா மற்றும் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்முகாமில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 16.09.2020-ல் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே அவரது குடும்பத்தாருக்கு குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக தகவல் கொடுக்கப்பட்டு மேல்சிச்சைக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அவர் குடும்பத்தாரும், நெருங்கிய உறவினர்களும் முதியவரை மேல்சிகிச்சைக்கு அனுப்பவில்லை .
இதனால் மேற்படி முதியவர் 5 நாட்களில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் அறியாமையால் செய்த தவறினால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சைக்கு ஒத்துழைத்திருந்தால் அவரின் மரணத்தை தடுத்திருக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பொதுமக்கள் கவனமுடன் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்களுக்குச் சென்று கொரோனா மற்றும் டெங்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்று தங்களது உடல் நலத்தைப் பாதுகாத்து உயிரிழப்பைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.