
திருவில்லிபுத்தூர் அருகே, மீன் பிடிக்கச் சென்றவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.
பிளவக்கல் அணைப் பகுதியில் வசிக்கும் மீன் வியாபாரிகளான ரசூல்தீன், ராமச்சந்திரன், தெய்வேந்திரன் மூவரும் இன்று காலை மீன் பிடிப்பதற்காக, அணைக்கட்டு விருந்தினர் மாளிகை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காட்டுப்பகுதியிலிருந்து திடீரென்று வந்த கரடி ரசூல்தீன் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் அதிர்ச்சியனைடந்த மூவரும் கரடியின் பிடியிலிருந்து தப்பி ஓடினர். கரடி தாக்கியதில் ரசூல்தீன் படுகாயமடைந்தார்.
தப்பி ஓடும் போது ராமச்சந்திரன் தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு கரடி தப்பி காட்டுக்குள் ஓடி மறைந்தது.
கரடி தாக்கியதில் காயமடைந்த ரசூல்தீனும், ராமச்சந்திரனும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.