December 6, 2024, 7:08 PM
28.9 C
Chennai

கிரிக்கெட் மோகம் ஒழித்து தனித்திறன் விளையாட்டை வளர்ப்போம்: சீமான்

namthamizar சென்னை; நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை  சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு  சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன.சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கபடி அணிகள் மோதுகின்றன. வெற்றி பெற்ற அணிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்குகிறார். இது குறித்து சீமான் தெரிவித்த போது…. திடீரென்று இந்தப் பாசறை தொடங்கப் பட்டுள்ளதன் நோக்கம் என்ன? தேசிய தமிழ் விடுதலை மீட்புக்கான நீட்சியில் மொழி,இனம், மண், கலை ,பொருளாதாரம், வேளாண்மை,சமூகம். நீர்வளம், ,நிலவளம்,, காட்டுவளம், மலைவளம்,கனிமவளம்,கல்வி உரிமை, வழிபாட்டுஉரிமை, பெண்ணுரிமை, அரசியல் உரிமை,தொழில் உரிமை, போலவே நம் பாரம்பரியம் சார்ந்த விளையாட்டையும் மீட்டெடுத்து வளர்க்க வேண்டி இருக்கிறது. ஒரு விவசாயி செடியைப் பிடுங்கும் போது எந்த வேரும் அறுந்து விடாமல் கவனமாகப் பிடுங்குவதைப் போல தேசிய இன மீட்பு விடுதலை அரசியலில் இழந்த எல்லாவற்றையும்  மீட்டெடுத்து வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.அதற்கான முன்னெடுப்பு முயற்சிதான் இந்த விளையாட்டுப் பாசறை. நாம் தமிழர் கட்சியில்  ஒவ்வொரு படைப்பிரிவாக உருவாக்கி வளர்த்தெடுத்து வருகிறோம். இளைஞருக்கானது, மகளிருக்கானது, மாணவர்களுக்கு ,வழக்கறிஞர்களுக்கு என்று படைப்பிரிவுகள்  இருப்பதைப் போல விளையாட்டுக்கும் பாசறை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாசறையை அய்யா சி.பா ஆதித்தனார் பெயரைக் குறியீடாக வைத்து அவர் பெயரில் தொடங்கியிருக்கிறோம் ஆதித்தனார்அவர்கள் தமிழர் விளையாட்டு வளர நீண்டகாலம் பாடு பட்டார். விளையாட்டு அழியக் கூடாது என்று அமைப்பு நடத்தி வளர்த்தவர் அவர். அவரது நோக்கம் உயர்ந்தது புனிதமானது. எனவே அதற்கு அய்யா சி.பா. ஆதித்தனார் பெயரை வைத்திருக்கிறோம். .அவர் பெயரில் தொடங்குகிறோம் ‘உடலினை உறுதிசெய் அறிவினை வளர்த்திடு. கொள்கை வகுத்திடு. கூடிச் செயல் செய்யப் பழகு என்கிற  கொள்கை முழக்கத்தோடு  அழிந்த நம் விளையாட்டை வார்த்து வளர்த்து எடுக்கப் போகிறோம். உடல் நலம் உடற்பயிற்சி பற்றி முன்னோடிகள் பலரும் பலவற்றைக் கூறியிருக்கிறார்கள். ‘உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறியிருக்கிறார். ‘உனது உடல்நலம் 3 கிலோமீட்டர் தொலைவில் விற்கப்படுகிறது. நடந்தே சென்று வாங்கி வா’ என்று தேசத்தந்தை காந்தியடிகள் கூறி இருக்கிறார். ‘மனித உடல் நுட்பமான கருவிகள் கொண்ட தொழிற்சாலை. நல்ல பகுத்தறிவு வாதி அதைப் பேணிக் காப்பான் ‘என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் ‘உங்கள் முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்’ என்று கூறியிருக்கிறார் ‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’ என்று நம் முப்பாட்டன் திரு மூலர் கூறியிருக்கிறார். இவ்வளவு முன்னோடிகள் கூறி இருக்கிறார்கள் இப்படி நம் முன்னோர்களின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் பாசறையின் பாதை பயணம் வடிவமைக்ககப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மதிப்பிற்குரிய மேனகா காந்தி ஜல்லிக்கட்டு வெளிநாட்டிலிருந்து வந்தது என்கிறார். ஆனால் துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் அந்நிய நாட்டு விளையாட்டுதானே.? அது பற்றி எதுவும் கூறுவதில்லையே ஏன்? கிரிக்கெட்டும் சினிமாவும் இரண்டு மதங்களாகிவிட்டன. என்கிறார்கள். கிரிக்கெட் நம் மண் விளையாட்டு இல்லையே? சொல்லப் போனால் நம் மண் சார்ந்த கபடி விளையாட்டைக்கூட வட இந்தியாவில் விளையாடி வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் கபடியை சிறுசிறு மாற்றங்களுடன்.நவீனப்படுத்தி விளையாடி வருகிறார்கள். . தமிழரின் பாரம்பரிய விளையாட்டு அழியக்கூடாது. அழிந்து போன விளையாட்டை ,மறக்கப்பட்ட விளையாட்டை மீட்டெடுப்பது இதன் நோக்கம். இதில் எங்களுடன் பல் வேறு உடற்பயிற்சிக் கல்லூரிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் துணை நிற்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க இதறகான பரப்புரை, பயிற்சிகள். போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்கு அவர்களும் நாங்களும் ஒன்றிணைந்து செயல் படுவோம். நம் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கும். துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் உயர்தட்டு மக்களின் விளையாட்டாகவே அறியப் படுகிறது. ஓர் உண்மையைச் சொல்லவேண்டும் கிரிக்கெட் விளையாட்டில் புகழ்பெற்ற நாடுகள் தனித்திறன் விளையாட்டில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள் தனித்திறன் விளையாட்டில்சிறந்து விளங்கு கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, போன்ற கிரிக்கெட் மோகம் இல்லாத நாடுகளில் தனித்திறன் விளையாட்டு வளர்ந்திருக்கிறது. குழு விளையாட்டிலும் நாம் பின்தங்கி உள்ளோம் கையுந்து பந்து, கால்பந்து போட்டிகளிலும்  மேலே செல்ல முடியவில்லை. ஒலிம்பிக் ஆசிய போட்டிகளிலும் வெல்ல முடியவில்லை. கிரிக்கெட்டுக்கு ஊடகங்கள் தரும் வெளிச்சமும் அதன் மூலம் கிடைக்கும் புகழ் இதன் தாக்கத்துக்கான காரணங்கள்.கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் ஒட்டப்பந்தய வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு பெரிய குறைதான். எனவே தமிழ் இளைஞர்களின் கிரிக்கெட் மோகம், மாயையிலிருந்து அவர்களை மீட்டு நம் விளையாட்டில் ஆர்வம் கொள்ளச் செய்யவேண்டும். முதலில் நம் பாரம்பரிய விளையாட்டு பற்றிய புரிதலை ‘ஆர்வத்தை, ஈடுபாட்டை ஏற்படுத்துவது. இளைஞர்களையும்  மாணவர்களையும்   மாயையில் மூழ்கடிக்கிற கிரிக்கெட்டிலிருந்து மீட்கவே கோடைக்காலத்தில்  இப்பாசறை யைத் தொடங்கியிருக்கிறோம்.அதனால்தான் கிரிக்கெட் காலத்தில் இளைஞர்களைக் கவனம் செலுத்த விடாமல் பாசறை நடத்துகிறோம். கபடியை முதலில் எடுத்துக் கொள்கிறோம். சிலம்பம், ஜல்லிக்கட்டு, கிளித்தட்டு என இது தொடரும்.கிளித்தட்டு விளையாட்டை கோகோவுக்கு இணையாக உளர்க்க முடியும். களரி நமது கலைதான். கேரளாவில் எடுத்துக் காத்துவருகிறார்கள் .அழிந்த நமது எல்லா விளையாட்டையும் உறுதியாக மீட்டெடுப்போம். கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களை தனித்திறன். விளையாட்டுகளான சிலம்பம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடைதாண்டிஓடுதல், வேகஓடுதல்.தூரஓடுதல், கையுந்து பந்து, வட்டுஎறிதல்,ஈட்டிஎறிதல் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ள வைப்போம் .தடகள,தனித்திறன் விளையாட்டினை ஊக்கம் கொடுத்து ஆர்வம் கொண்டவர்களாக மாற்றுவோம். தமிழ்நாடு முழுக்க பயணித்து நுட்பமான விளையாட்டு வீரர்களை இனங்கண்டு தேர்வு செய்து அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்போம்.

ALSO READ:  வாடிப்பட்டி ஐயனார் கோயில் விழா: வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த கோரிக்கை!
author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ALSO READ:  IND Vs SA T20: அபார வெற்றி பெற்ற இந்திய அணி; தொடரை வென்றது!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week