விவாகரத்து பெற்ற பெண்களை ஏமாற்றி திருமணம்: ரூ.2 கோடி வரை மோசடி செய்த நபர் கைது

Published:

சென்னை: விவாகரத்து பெற்ற பெண்களைக் குறிவைத்து, அவர்களிடன் மயக்கும் விதத்தில் பேசி திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி வரை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, கோவை, குமரியில் இவர் விவகாரத்து பெற்ற பெண்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு வீழ்த்தியுள்ளார் அந்த நபர். சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). பொறியாளரான் இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இவருக்கும் மதுரையைச் சேர்ந்த வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தை ஊனமுற்றதாக இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010ஆம் ஆண்டு வனிதாவை சீனிவாசன் விவாகரத்து செய்தார். மாற்றுத் திறனாளிக் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு வளர்த்து வந்தார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அபிநயாவை சீனிவாசன் திருமணம் செய்தார். இருவரும் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். இதனிடையே அடிக்கடி சீனிவாசன் வெளியூரில் சென்று தங்கினார். இது அபிநயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. திடீரென வீட்டில் இருந்த பழைய போட்டோக்களை எடுத்து அபிநயா பார்த்த போது சீனிவாசனுடன் மேலும் 2 பெண்கள் திருமணக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் அபிநயா. உடனே இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அபிநயாவின் புகாரின் பேரில், போலீசார் சீனிவாசனைப் பிடித்து விசாரித்தனர். அப்போது கோவையைச் சேர்ந்த டாக்டர் சுமித்ரா, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயா பிரின்ஸ் ஆகிய மேலும் 2 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களை அந்தந்த ஊரிலேயே வீடு எடுத்து சீனிவாசன் தங்க வைத்துள்ளார். வாரம் 2 முறை அவர்களது வீட்டுக்குச் சென்று சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டார். அவர்கள் சந்தேகம் அடைந்து கேட்கும்போது வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டதாக சமாளித்து வந்தார். இதனால் சென்னை, கோவை, கன்னியாகுமரி என சீனிவாசன் 3 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவர்களில், டாக்டர் சுமித்ரா உள்பட 3 பேரும் ஏற்கெனவே விவாகரத்து பெற்றவர்கள். அனைவரையும் திருமண இணையதளம் மூலமே வலை விரித்து வீழ்த்தி உள்ளார் சீனிவாசன். மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்ந்து வருவதாக சீனிவாசன் கூறியதால், அவர் நல்லவராக இருக்கலாம் என்று நினைத்து பரிதாபப்பட்டு அவரைத் திருமணம் செய்ததாக ஏமாந்த பெண்கள் கூறியுள்ளனர். சீனிவாசன் திருமணம் ஆனதுமே அபிநயாவின் ரூ.25 லட்சம் பணம், மற்றும் அவரது பெயரில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதே போல் கோவை டாக்டர் சுமித்ராவின் ரூ.90 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் தனக்கு பத்திரப் பதிவு செய்து கொண்டார். அவர்களது நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட சீனிவாசன் குறித்து கோவையில் உள்ள டாக்டர் சுமித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை விரைந்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயாபிரின்ஸ் வேலை காரணமாக துபாய் சென்றுள்ளார். அவரும் இவரிடம் ஏமாந்திருப்பது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனிவாசனிடம் ஏமாந்தது இந்த நான்கு பெண்கள் மட்டும்தானா? அல்லது வேறு யாரேனும் உள்ளனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img