- சென்னை வந்தார் அமித்ஷா!
- அமித்ஷாவுக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு
- அமித்ஷாவுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு
- தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி: அமித்ஷா தமிழில் டுவிட்!
திட்டமிடப் பட்ட பயணத்தின்படி, சென்னைக்கு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும் அவர் இன்று சென்னை வந்தடைந்தார். அவரை, சென்னை விமான நிலையத்தில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை வரவேற்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் சென்றனர்.
வரும் சட்டசபைத் தேர்தலில் கணிசமான அளவில் வேட்பாளர்களை வெற்றி பெறவைத்து, சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளது பாஜக., அதன் தமிழகத் தலைவர் எல்.முருகனும் அதையே தனது குறிக்கோள் என்று தெரிவித்தார். கட்சிக் கூட்டங்களிலும் இதை வலியுறுத்தி அவரும் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் இந்த நிலைப்பாடைத் தெரிவித்து, கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாது ஆலோசித்து தேர்தல் வியூகம் வகுக்கவும், கூட்டணி குறித்து அதிமுக., தலைமையுடன் பேசி முக்கிய முடிவு எடுக்கவும் அமித்ஷாவின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர், தமிழக பாஜக., தலைவர் முருகன், தமிழக பாஜக., பொறுப்பாளர் சி.டி.ரவி, ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா தங்கும் விடுதி வரை சாலையின் இரு புறமும் கட்சித் தொண்டர்கள் கூடி, ஆடல், பாடலுடன் அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதைக் கண்டு உற்சாகம் அடைந்த அமித் ஷா, காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றபடி வணக்கம் கூறியும் கை அசைத்தும் நன்றி தெரிவித்தபடி நடந்து சென்றார்.
பின்னர் இது தொடர்பாக, தனது டிவிட்டர் பதிவில் படங்களைப் பகிர்ந்து, சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! என்று தமிழில் குறிப்பிட்டார்.
பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வந்த அமித் ஷாவினை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, விழா மேடையில் வைக்கப் பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு அமித் ஷா மரியாதை செலுத்தினார்.
பின்னர், குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார் அமித் ஷா. அப்போது, தமிழக அரசு சார்பில் அமித் ஷாவுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. அமித்ஷாவுக்கு நினைவுப்பரிசாக விநாயகர் சிலை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. துணை முதல்வர் பொன்னாடை போர்த்தி நர்த்தன நடராஜர் சிலை பரிசளித்து கௌரவித்தார்.
முன்னதாக, அமித்ஷா வருகையை எதிர்த்து GoBackModi போன்று GoBackAmitShah என்ற ஹேஷ்டாக்கை சிலர் டிரெண்ட் செய்தனர். இதற்கு போட்டியாக பாஜக., ஆதரவாளர்கள் TNWelcomesAmitShah என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அமித்ஷாவின் வருகையை வைத்து ”#GoBackAmitShah, #TNWelcomesAmitShah, #Tamilnadu, #TNwelcomeschanakya” உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகின்றன