
நடிகர் ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 234 சிதறு தேங்காய் உடைத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும்,வருகிற டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கொண்டாடும் விதமாக மதுரையில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மதுரை மாநகர் மாவட்ட இணைச்செயலாளர் அழகர்சாமி தலைமையில் ரஜினிகாந்த் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறவேண்டுமென 234 சிதறுதேங்காய்களில் தொகுதிகளின் பெயர்களை ஒட்டி தேங்காய்களை உடைத்து சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து 234 எலுமிச்சம் பழங்களில் திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் ஆஞ்சநேயர் கோயிலில் 234 வடைகளை கோர்த்த மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் ரஜினி மக்கள் மன்றத்தின் தெரிவித்தனர்.