
கணவரைக் காப்பாற்ற முயன்ற இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில், தெர்மல் நகர் முத்து நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). துத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர், இப்போது அப்பகுதியில் இட்லி கடை நடத்திவருகிறார்.
கருப்பசாமிக்கு அனுஷியா எனும் 27 வயது மனைவியும் 5 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல தொழிலுக்கு கிளைம்பியுள்ளார் கருப்பசாமி. அனுஷியாவும் அவரை வழி அனுப்பி சிறிது நேரம் வாசலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் செல்லும் வழியில் மழைநீர் தேங்கியிருந்தது.
அதனைக் கடக்க தண்ணீரில் கால் வைத்த கருப்பசாமி, திடீரென பயங்கரமாக கத்தியுள்ளார். தேங்கியிருந்த மழைநீரில் மின் கம்பி அருந்து விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
கருப்பசாமி துடிப்பதை பார்த்தஅனுஷியா அலறியடித்துக்கொண்டு கணவனைக் காப்பாற்ற ஓடி வந்துள்ளார். அவரும் தண்ணீரில் காலை வைக்க, கடுமையாக மின்சாரம் பாய்ந்த நிலையில் அனுஷியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்தது, ஆக்கம்பக்கத்தினர் ஒரு வழியாக கருப்பசாமியை காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கணவனைக் காப்பாற்ற முயன்று 5 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.