அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை தடையின்றி 24 மணி நேரமும் செலுத்தும் வகையில், நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசு துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை அரசிற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை, 24 மணிநேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சேவைக்காக, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளை திரட்டல் வங்கிகளாக தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய இரு வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துவிட்டது.
இந்த இரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது