
திமுக., கூட்டணியில் உள்ள மதிமுக.,வுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ கையெழுத்திட்டனர். மதிமுக., 12 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில் திமுக., 6 தொகுதிகள் கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது…
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ யோசித்து வந்த நிலையில் நேற்று, ம.தி.மு.க.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க முடிவு எட்டப்பட்டது.

நேற்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க., தரப்பில் 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனவும், அதில் விரும்பிய தொகுதிகள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இறுதியில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்துள்ளதாகவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் நேற்று செய்திகள் வெளியாகின
இதன் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு கட்சி குறைந்தது 12 தொகுதியில் போட்டியிட்டால் தான் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும். வாக்கு சேகரிக்க குறைந்த நாட்களே இருப்பதால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம், கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின்படி தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன். ஸ்டாலினுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
தொகுதி உடன்பாடு எட்டப்படும் முன்னதாக அறிக்கை வெளியிட்ட வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கௌரவத்துடன் நடத்தியது. எங்கள் கட்சியினரும் தி.மு.க. வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து தி.மு.க. வுடன் பேச்சு நடத்துவோம். கமலுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை.ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை தாயகத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்திலும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது… என்று தெரிவித்திருந்தார்.
வைகோவின் இந்த முடிவுக்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு மதிமுக மறுபடி- திமுக என்ற கட்சி எதற்கு என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வைகோ 6 தொகுதிகளுடன் நின்றதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன இப்படி பதவிக்காக கட்சியை அடகு வைத்த ஒரு தலைவனை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன
கடந்த தேர்தலின் போது ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கருத்து தெரிவித்திருந்த வைகோ 25 20 தொகுதிகளுக்கு குறைந்து எக்காலத்திலும் நாங்கள் கூட்டணியில் தொகுதிகள் பெற மாட்டோம் இன்று உறுதியுடன் கூறியதை இப்போது இணைய வெளியில் உலவ விட்டு வருகின்றனர். கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல் என்று முண்டாசுக்கவிஞன் பாரதி குறிப்பிட்டது மாதிரி சுயமரியாதையை விற்று பதவி வாங்கும் இழிநிலைக்கு மறுமலர்ச்சி திமுக., ஒரு போதும் ஆளாகாது… என்று வைகோ குறிப்பிட்ட வீடியோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி மு க விலிருந்து வைகோவை விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீ குளித்த 6 பேரின் நினைவாக வைகோவின் கட்சி தி மு க சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டி இடுவதாக சமூகத் தளங்களில் வைகோ மீது விமர்சனம் முன்வைக்கப் பட்டு வருகிறது.
திமுக., தனது தொண்டர்கள் மூலம் மிகவும் கீழ்த்தரமாக காங்கிரஸ் மற்றும் வைகோ குறித்து பேசச் செய்து, அதனை சமூகத் தளங்களில் பரப்பியும் வேடிக்கை பார்த்து வருவது கூட்டணிக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. வைகோ குறித்து திமுக., அடிமட்டத் தொண்டர்கள் வைத்த விமர்சனம் இது… எமனைக் கூட நம்புவோம், இந்த எமனை நம்ப மாட்டோம் என்பது!