
ஆட்டோ சவாரி முடிந்து தனது வீட்டிற்கு வந்த நசீன்கானை முன்விரோதம் காரணமாக முகமுடி அணிந்து வந்த 10 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் நசீர் கான். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மஸ்தான் என்பவருடன் இவருக்கு மோதல் இருந்து வந்திருக்கிறது.
இருவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, கடந்த 3 மாதத்திற்கு முன் நசீர்கான், மஸ்தானைகொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதன்படியே கொலை முயற்சியில் நசீன்கான் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மஸ்தான் தப்பிவிட்டார். இதுதொடர்பான வழக்கு அங்குள்ள காவல் நிலையத்தில் உள்ளது.
இந்தநிலையில், நேற்றிரவு நசீர் கான் ஆட்டோ சவாரி முடிந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்தபடி, முகமூடி அணிந்து வந்த 10க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கியது.
பயந்து போன நசீன் கான் அவர்களில் இருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும் விடாத 10 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில் நிலைத்தடுமாறி நசீர் கான் கீழே சரிந்ததும், அந்த கும்பல் நசீரின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த நசீர் இறந்த கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்துவிசாரணை நடத்தினர். இதனிடையே தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் ஆகியோரும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நசீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நசீர்கானை கொலை செய்தது யார் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மஸ்தான் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.