
சின்னபொன்ணு என்ற சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்த புகாரில், 54 வயதான கிருஷ்ணன் என்ற தொழில் அதிபரின் வீட்டில் எனது மகள் வேலை செய்து வருகிறாள். இந்நிலையில், எனது மகள் எனது 10 வயது பேத்தியை அந்த தொழிலதிபருக்கு விற்று விட்டார்.
அந்த பிஞ்சு குழந்தையை ஏற்காடு, கோவா, சென்னை என பல இடங்களுக்கு அழைத்து செல்கிறார், ஆனால் நான் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்.
அதனால் நீங்கள் அவளை அழைத்து விசாரியுங்கள் என்று கூறினார்.
இதை தொடர்ந்து, சைல்டு லைன் ஆமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அந்த சிறுமியின் கொடூர தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம், ”நான் 10 லட்சம் ரூபாய் வாங்கி பேங்ல போட்டுட்டேன், நினைச்சப்ப அத எடுத்து வீட்ட கட்டிக்கிட்டு போயிருவேன். இனிம அவங்க எங்க போனாலும் நான் கேக்க முடியாது, யாராவது தேவயில்லாம பிரச்சனை பண்ணாங்கன்னா சென்னைக்கு கூட்டிக்கிட்டு போயிருவாரு.” என்று பேசியுள்ளார்.
இந்த ஆடியோ நேற்று சேலத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், ”சிறுமியை சைல்டு லைன் நிர்வாகிகள் மீட்டு ஹோமில் வைத்துள்ளதை தொடர்ந்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.
சிறுமியை தத்து கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்தி வருகின்றனர்,” என்றார். ஆனால், இதுபற்றி மகளிர் போலீசார் சிறுமியின் பாட்டியிடம், ”குழந்தையை தாய் தானே தத்து கொடுத்துள்ளார்? உங்கள் வேலையை பார்க்க வேண்டியது தானே?” என அலட்சியமாக பேசியுள்ளனர்.