
பெற்ற குழந்தையை, தாயே யாரும் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் போட்டு விட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 வயதான ஜெயச்சந்திரன் என்ற நபர், திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி குரும்பபட்டியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், 24 வயதான இவரது மனைவி சங்கீதா, கற்பமாக இருந்ததை அடுத்து, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு 1½ கிலோ எடையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. ஆனால், சங்கீதா தான் பெற்ற அந்த குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே அவர் விட்டு விட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து, சிறிது நேரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தை கதறி அழத் தொடங்கியது. அப்போது, அங்குள்ள ஊழியர்கள் சங்கீதாவை ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை, அதே சமயம் அவர் வைத்திருந்த பொருட்களும் காணாமல் போனதால் அவர் வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது.
இதனால், மருத்துவமனையில் இருந்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள், மருத்துவமனையில் அவர் அளித்த முகவரியை வைத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று பார்த்தனர்.
அப்போது அவர், தனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் 3-வது குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது, அதனால் ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுமாறு கூறியுள்ளார்.
மேலும், தனது கணவர் ஜெயசந்திரனின் வருமானம் தங்களுக்கே பற்றாக்குறையாக இருப்பதால், தனால் 3-வதாக பிறந்த பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வீடிற்கு சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் ஜெயசந்திரன் குடும்பத்தினரிடம் முறையாக எழுதி வாங்கிக் கொண்டனர்.
குழந்தை எடை குறைவாக இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளித்து பிறகு காந்திகிராமத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க சமூக நலத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மற்றோரு பக்கம், பச்சிளம் குழந்தையை கேட்பாரற்ற நிலையில் கைவிட்டுச் சென்ற குற்றத்திற்காக, சமூக நலத்துறை அதிகாரிகள் சங்கீதா மீது போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.