
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திமுக அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய் தொற்று அதிகம் உள்ள 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் திருச்சியில் திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
, ‘கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தி, கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனரை பங்கேற்க வைத்தது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
எனவே, பள்ளிக்கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நேற்று வெளியிட்ட அறிக்கையில் நான் அமைச்சரானதற்கு வாழ்த்து சொல்ல, கலெக்டர், கமிஷனர்கள் என் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், அவர்களும் பங்கேற்று சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அரசு ஊழியர் என்ற முறையில், என் அலுவலகத்தில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதை அறிவேன். செய்திகளில் வந்தது போல், இது முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்து விட்டு, தனக்கு பிரச்னை என்றதும், அதிகாரிகளை பலிகடா ஆக்கும் வகையில் அறிக்கை விட்டுள்ள அமைச்சரின் செயலால், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.



