
வால்பாறை நகரில், மேற்கூரையில் இருந்து வீட்டிற்குள் குதித்த சிறுத்தையால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறையில், கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், இரண்டு இடங்களில் கூண்டு வைத்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில், வால்பாறை காமராஜ் நகருக்குள், நள்ளிரவு, 12:30 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, சின்னம்மாள் என்பவரின் வீட்டு மேற்கூரை மீது குதித்தது. ஓடு உடைந்ததும், சிறுத்தை வீட்டினுள் விழுந்தது.
அப்போது, சின்னம்மாள், அவரது மகன் மாசாணி, மருமகள் சுகன்யா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்தனர்.
சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு, வீட்டினுள் இருந்தவர்கள் கூச்சலிட்டவுடன், சிறுத்தை மேற்கூரை வழியாகவே ஓடியது.
இந்த சம்பவத்தில், சிறுத்தை நகம் கீறியதில், காயமடைந்த சின்னம்மாள்,50, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வால்பாறை வனச்சரக வனவர் முனியாண்டி மற்றும் மனித வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சிறுத்தையை பிடிக்க காமராஜ் நகரில் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.