
தென்காசி மாவட்டம், புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் இன்று காலை மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 நாட்களாக நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார். இவருக்கு வயது 48 கடந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் புளியங்குடியில் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றார். சுவாமிநாதன் மறைவுக்கு தென்காசி மாவட்ட போலீஸார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து தென்காசி மாவட்ட போலீஸார் தெரிவித்ததாவது…
கொரோனா தொற்றின் காரணமாக திரு. ச.சுவாமிநாதன், துணை காவல் கண்காணிப்பாளர், புளியங்குடி அவர்கள் மறைவுதென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் கடந்த 14.09.2020 முதல் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு. சுவாமிநாதன் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக திருநெல்வேலியில் உள்ள SHIFA தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (02.06.2021) காலை சுமார் 09.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர்களது உடல் அவரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS, தென்காசி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கோகுலகிருஷ்ணன், சாத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன், திரு. குப்புசாமி, DSP SBCID, தென்காசி மற்றும் விருதுநகர் மாவடட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துபோன திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கலிவரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கலிவரதன் அவர்கள் “கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாம் ஒரு நல்ல காவல்துறை அதிகாரியை இழந்துவிட்டோம். அவர் விட்டுச் சென்ற காவல்பணியை மேற்கொள்ள வேண்டியது நமது கடமை.
கொரோனா நோய்த் தொற்று காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் நாம் அனைவரும் பணிபுரியும் இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவதுடன் பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், கண்டிப்பாக அனைவரும் அரசு உத்தரவின்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இறந்துபோன காவல் துணைக் கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு காவல்துறையினர் உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும், காவல்துறையில் ஏற்பட்ட கடைசி மரணமாக நமது காவல் துணைக் கண்காணிப்பாளரின் மரணம் இருக்க வேண்டுமென்றும், ஆகவே பொதுமக்களை காக்கும் பணியுடன் சேர்த்து காவல்துறையினர் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் DCRB துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ், நிர்வாக அலுவலர் திரு. ஹரிராம், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் உட்கோட்ட காவல் அலுவலகங்களிலும் இறந்துபோன திரு. சுவாமிநாதன், காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
கடந்த 1997ம் வருடம் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்த திரு. சுவாமிநாதன் அவர்கள் கடந்த 2020ம் வருடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு திருமதி. யமுனா என்ற மனைவியும், சஹானா(13), சாதனா (12) மற்றும் சந்தோஷ் (09) ஆகிய குழந்தைகளும் அவரது சொந்த ஊரான சாத்தூரில் வசித்து வருகின்றனர்..