
ஊருக்குள் புகுந்த முதலையை கயிற்றால் கட்டி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு கொள்ளிடக்கரையோரம் உள்ள சித்தமல்லி கிராமத்தில் முதலை இன்று அதிகாலை புகுந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக ஊரார்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்கள், 7 அடி நீளம் இருக்கும் சுமார் 300 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை கயிற்றால் கட்டி தற்காலிகமாக கட்டிபோட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து 4 மணிநேரம் ஆகியும் அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

காவல் துறையினர் மட்டும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கின்றனர்.
இதுமட்டுமல்லாது, அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் சிலர் விபரீதம் தெரியாமல் முதலையிடம் விளையாட்டு காண்பித்து வரும் நிலையில், முதலையை உடனடியாக அதிகாரிகள் வந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.