
இன்று , ஜூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாகும்.
பள்ளிப்பிள்ளைகளும், பள்ளிப்பருவத்தை மறக்காத பெற்றோர்களும் ஆசிரியர்களும் வருடந்தோறும் இந்நாளில் நடத்தப்படும் நேரடி பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் பற்றி நினைக்காமல் இருக்கமாட்டார்கள் !
சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு பேரணிகள், சுகாதாரத்தைப் பேணும் செயல் திட்டங்கள், போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இளஞ்சிறார்களின் ஒவியங்கள் இயற்கையின் பெருமையையும் , சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முறைகளையும் விளக்கும் விதமாக வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இளம் வயதில் அவர்கள் மனதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்படும்.
பள்ளிச்சிறார்களுக்கு மட்டும் தான் விழிப்புணர்வு தேவையா ?
எல்லா மனிதர்களுக்கும், ஊராட்சி நகராட்சி நிர்வாகங்களுக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் சர்வதேச அளவிலும் சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை !
மனிதன் சுற்றுச்சூழலை மாசு படுத்தி, தன் அழிவுக்குத் தானே அடித்தளம் இட்டு வருகிறான். எதிர்கால சந்ததியினருக்குத் தூய்மையான பூமியை விட்டுச் செல்ல வேண்டுமானால், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும், மற்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும், மாசுப்படுத்துதல் குறைக்கப்பட வேண்டும் ,சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு கட்டாயமாக வேண்டும்.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கிறது. 1972ம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக மாநாட்டில் உலகச் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்பாடு என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. அதன் முடிவில் ஜுன் 5ஆம் தேதியை ’உலக சுற்றுச் சூழல்’ (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகிறது.
நாம் வாழும் இந்த பூமியையும் ,அதன் இயற்கை வளங்களையும், பல்லுயிர்களையும் பாதுகாத்தல் , தொழில் வளர்ச்சி, போக்குவரத்து சாதனங்கள் , நாகரீக வாழ்வு போன்ற காரணிகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைக் களைதல், தூய்மையைப் பேணுதல், சுற்றுச்சூழலைக் காத்தல் போன்றவை இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் நோக்கமாகும்.
எல்லா நாடுகளிலும் ஜூன் 5 ம் நாள் சுற்றுப்புறசூழல் தினம் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு வருடமும் ஐ.நா அமைப்பால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாட்டில், ஒரு நகரத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு, பாகிஸ்தானில் முக்கிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளும் எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “சுற்றுச்சூழல் : மறுசீரமைப்பு “ என்பதாகும்.
மறுசீரமைக்காவிட்டால், நம் வளங்களை நாம் இழந்து விடுவோம் !
அழிந்து போகக் கூடிய நிலையில் இருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாடு, விலங்குகள் தாவரங்களைப் பாதுகாத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் .
நம்நாட்டில்,பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ‘சிறப்பான சுற்றுச்சூழலுக்காக உயிரி எரிபொருள்களின் ஊக்குவிப்பு’ என்பது இந்தாண்டு நிகழ்ச்சியின் மையக்கருவாக இருக்கும்.
சுற்றுப்புறசூழலைப் பேணுவோம் !எ திர் கால சந்ததியினருக்கு அழகான பூமியை பரிசளிப்போம் !
கட்டுரை: கமலா முரளி