
பாதிரி ஜார்ஜ் பொன்னையா, அருமனை ஸ்டீபன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி
இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப் பட்டது.
ஹிந்து மதக் கடவுளர், பாரத மாதா, பூமாதேவி, பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி ஆகியோர் குறித்து அவதூறாகவும் மிகக் கேவலமாகவும், சமூகத்தில் பதட்டமும் பிரிவினையும் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியதாக அருமனை பாதிரி ஜார்ஜ் பொன்னையா மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
தொடர்ந்து, அருமனையில் இந்தக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த ஸ்டீபன் என்பவரும், இதே கூட்டத்தில் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாகவும் சமூகத் தளங்களில் வீடியோக்கள் உலா வந்தன. இதை அடுத்து அவர் மீதும் புகார் பதிவு செயப் பட்டது.
இந்நிலையில் இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப் பட்டனர். அவர்கள் மீது மத மோதல், அவதூறு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன என்றும், இருவர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் கோரிக்கை பல தரப்பில் இருந்து வைக்கப் பட்டு வருகிறது.
இதனிடையே, இன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அரசுராஜா
இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப் பட்டது.