
பாலமுருகன் என்ற நபர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர்.
இவருக்கு 26 வயதான பிரியா என்ற மனைவி, 4 வயதான ஜெய்காந்த், 3 வயதான ஜெய்விஷ்ணு ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது, பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பிரியா தனது குழந்தைகளுடன் தனியாக சேத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, பிரியா தனக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து மாலையில் பால் காய்ச்சி உள்ளார்.
அப்போது கவனக்குறைவாக இருந்த பிரியா, பாலில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்தை கலந்து காய்ச்சி உள்ளார். பின்னர் அதை தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்து விட்டு மீதம் உள்ள பாலை பிரியா குடித்ததாக கூறப்படுகிறது
அன்று இரவு குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். தொடர்ந்து பிரியாவும் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த பிரியாவின் உற
வினர் ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அடுத்து, தொடர்ந்து அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிரியா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்காபட் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாவே எலி மருந்து கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தாரா? அல்லது உண்மையிலேயே கவனக்குறைவாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், சேத்தூர் கிராம மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.