பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் கவனத்தை அறநிலையத்துறை பக்தர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதில் காட்டுவதில்லை என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் இது குறித்து தெரிவித்ததாவது…
கொரோனா தொற்றுநோயை இந்து அறநிலையத் துறை திட்டமிட்டு பரப்புகிறதோ!??. கோவில்களில் வாரத்தில் மூன்று தினம் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற தினங்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது … அதனால் ஒட்டுமொத்தமான பக்தர்கள் இந்த நாட்களில் திருக்கோவில்களில் கூடுகின்றனர்.
பால்குடம் எடுக்கும் பக்தர்கள் கோவிலில் சென்று அங்கு கைங்கர்யம் செய்யும் நபரிடம் பாலை கொடுப்பார்கள் அது சுவாமிக்கு அபிஷேகம் ஆகும். ஆனால் கோவில்கள் எல்லாமே தரிசன டிக்கெட் என்ற நிலையை கொண்டு வந்ததனால் பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் கால்கடுக்க தலையில் பால் குடத்துடன் நிற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.
நெடு நேரம் நிற்பதால் நோய் தொற்று அபாயம் இருப்பதால் இந்த பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கோவிலில் பக்தர்களின் காணிக்கை வாங்குவதில் எவ்வளவு ஆர்வத்துடன் அறநிலையத்துறை நிர்வாகம் இருக்கின்றனவோ அதே போல் வரும் பக்தர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.