
கொண்டாட்டங்களும் இனிப்புகளும் கண்ணும் இமையும் போல, பிரிக்க முடியாதவை. ‘கொள்ளாத வாய்க்குக் கொழுக்கட்டை’.. பண்டிகை பட்சணங்களுக்கு மிகவும் பொருந்துகிற சொலவடை. திகட்டத் திகட்ட நாம் உண்ணும் இனிப்புகள், எப்படியாகிலும் நலத்தைச் சீர்கெடுப்பனவே. ‘எதையும் லைட்டா எடுத்துக்கிட்டா வெயிட்டான செலிபரேஷன் உறுதி’ என்கின்றனர், டயட்டீஷியன்கள்.
தீபாவளிக்கு ஸ்வீட்ஸும் சாப்பிடணும், திணறாம ஸ்டெடியாகவும் இருக்கணுமா…? இனிப்பைச் சேர்ப்பதில் கவனம் இருப்பின், இன்பத்தில் எப்போதும் குறைவிருக்காது.
நல்ல பண்டங்களை எப்படித் தரம்பிரித்து அறிந்துகொள்வது?
“மறுசுழற்சி செய்யப்படாத சுத்தமான நெய்யில் சமைத்த பலகாரம்தான் நல்லது. என்னதான் நல்ல ஸ்வீட்டாக இருந்தாலும் அளவு மிஞ்சக் கூடாது, அஜீரணக் கோளாறு ஏற்படும்.”
வீட்டுப் பலகாரங்களோடு ஒப்பிடுகையில் கடைப் பலகாரத் தயாரிப்புகளின் குறைபாடென்ன?
“நம் வீடுகளில் செய்யும் பாயசமும், ரவா லட்டுகளும் தேவைப்பட்டதை மட்டுமே வாங்கிக்கும். தேவையற்ற பொருள்களைச் சேர்த்தால் பதமும் பக்குவமும் சரியா வராது. ஆனா, பெரிய கடைகள்ல செய்யப்படுற ‘காலா ஜாமூன்’ போன்ற மெகா இனிப்புகள், எதைச் சேர்த்தாலும் ஏத்துக்கும். ஆனா அவற்றையெல்லாம் நம்ம உடல் ஏத்துக்காதே!”
யார் யார், எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிடலாம் / சாப்பிடக்கூடாது?
காலையில கொஞ்சம் இனிப்புகள் எடுத்துக்கலாம். குழந்தைகள் ஓரளவு சாப்பிடலாம். பெரியவர்கள் ரொம்பவே அளந்துதான் ஸ்வீட்ஸ் எடுத்துக்கணும். அதுவும், மதியம் அசைவம் சாப்பிட்டா ஸ்வீட்ஸ் விஷயத்தில கவனம். இரண்டும் சேர்த்து வயிற்றைப் பதம் பார்த்திடலாம்!”
இனிப்பு அதிகம் சாப்பிட்டு அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள் உண்டானால்..?
“பல வீடுகள்ல இஞ்சிசுரசம் செஞ்சுக் குடிப்பாங்க.. இஞ்சிச்சாறு, நெய், வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி எல்லாத்தையும் சேர்த்துக் காய்ச்சி சூடுபண்ணிக் குடிக்கிறது. அப்படி செஞ்சா ஸ்வீட்ஸ் சாப்பிட்டு ஏற்பட்ட உப்பசம் மாறிடும். இஞ்சிசுரசம் பண்ண முடியாவிட்டால் எளியவழி, வெந்நீர் குடிப்பதுதான்”
இனிப்புகளைக் கடைகளில் வாங்குவது சரியா?
“கடைகள்ல வாங்குறது, தப்பில்ல. ஆனா, நல்ல கடைகளா பார்த்து எச்சரிக்கையோட வாங்கணும். சின்னக் கடைகள்ல மட்டுமல்லாம, பெரிய பெரிய கடைகள்லயும்கூட சமையல்சோடாவும் மைதாவும் கலந்துடுறது, கூடுதல் சேர்மானங்களைத் திணிக்கிறதுன்னு ஆரோக்கியக்கேடுகள் நடக்குது. கவனமா இருக்கணும்.”
கலோரிகளைக் கணித்துத்தான் கடை இனிப்புகள் செய்யப்படுகின்றனவா?
“குலாப் ஜாமூன், ரசகுல்லா மாதிரி ஸ்வீட்ஸ்ல அந்தளவுக்கு கலோரிகள் அதிகமிருக்காது. மைசூர்பாகு மாதிரி இனிப்புகள்ல டபுள் கோட்டடு ஷுகர் இருக்கும். ஒன்றுக்கு ஒன்றுங்கிற கணக்கிலதான் இனிப்பு சேர்க்கணும். எல்லாக் கடைகள்லயும் அப்படி சரியா சேர்த்துச் செய்வாங்கன்னு சொல்லமுடியாது. நாமதான் விழிப்புணர்வோடு இருக்கணும்!”
கொண்டாட்டமும் கெடாமல், ஆரோக்கியமும் கெடாமல் இனிப்புக் கலாசாரத்தை மடைமாற்றும் வழி..?
நம்ம பண்டிகைகள் ஆரோக்கியமான உணவுகளுக்கானவையா தான் எப்பவும் அமைந்திருக்கும். உதாரணத்துக்கு விநாயகர் சதுர்த்தின்னா, அவல் பொரிகடலை.. இப்படி. ஆனா, தீபாவளியிலதான் ஸ்வீட்ஸ்ன்னு ஆகிப் போச்சு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாத்தணும். இனிப்புகளையே ஆரோக்கியம் கலந்ததா ஆக்கணும். ஃப்ரூட்ஸ் கேசரி, கேரட் அல்வா.. இப்படி நிறைய செய்யுறாங்க. அப்படிப்பட்ட பண்டங்களை வீட்டில செஞ்சு சாப்பிட்டா அதுதான், ஹெல்தி!”