
அண்ணாமலைக்கு அகரம் தெரியாதுங்கண்ணா… சரிங்கண்ணா… சிகரம் தெரிந்த வைகோ சீறியிருக்க வேண்டாமா? – மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ.,வுக்கு பாஜக., தமிழக தலைவர் கே.அண்ணாமலை கொடுத்துள்ள செப்பல்ஷாட் சவுக்கடி பதில் இதுதான்!
பாஜக.,வில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது” என்று, மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ., நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு அண்ணாமலை பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,
இலங்கை தமிழர், காவிரி நதிநீர், மீனவர் இன்னல் என பல பிரச்சனைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்திய வைகோ முல்லைப் பெரியாறு அணையை திமுக அரசு கேரளாவிற்கு தாரைவார்த்து அணையின் மதகுகளை கேரளா அமைச்சர் திறந்தபோது தமிழக விவசாயிகள் துடிதுடித்துப் போனார்களே… அப்போது துடிப்புடன் துயர்துடைக்க வைகோ போராட வருவார் வருவார் என்று எண்ணி விவசாயிகள் காத்திருந்தார்கள்…
முல்லைப் பெரியாறு அணைக்கு நான் நான்கு முறை போராட்டம் நடத்தி விட்டேன் அது முடிந்துபோன பிரச்சினை என்று தன் அறிக்கையில் முழங்கி இருக்கிறார் வைகோ. ஆனால் இப்போது திமுகவின் அக்கறை இன்மையால் ஆளுமைக் குறைவால் புதிதாக உருவான பிரச்சனையை விவசாயிகளின் தவிப்பை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று பாஜக தேனி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள்.. மக்களுக்கு ஆதரவான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் வேண்டி தானே விவசாயிகள் சார்பில் அவர்கள் ஆதங்கம் தீர்க்க ஐயா வைகோ அவர்களுக்கு தேனி ஆர்ப்பாட்டத்தில் அழைப்பு விடுத்தேன்
வெறும் போலீஸ் தானே என்று என்னை இடித்துரைப்பதாக நினைத்து ஒட்டுமொத்த காவல் துறையையே இழிவுபடுத்தி இருக்கிறார் வைகோ. போராட்டம் முடிந்த 4 நாட்களுக்கு பிறகு மெதுவாக வாய் திறப்பது அவருக்கு பாஜகவின் போராட்டத்தால் விவசாயிகளால் ஏற்பட்ட அழுத்தத்தாலா அல்லது ஆளும் கட்சிக்கு ஒத்தூதும் அரசியலா?
இந்த உங்கள் அறிக்கையில் கூட முல்லைப் பெரியாறு அணையை கேரளாவிற்கு தாரைவார்த்த திமுக அரசுக்கு ஒற்றை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.. ஏன் வைகோ அவர்களே?! வாரிசு அரசியலை எதிர்த்து வாள் வீசி பின்பு அக்கட்சியிலேயே வாரிசுக்கு சாமரம் வீசி தங்கள் கட்சியில் வாரிசு ஐக்கியமாகி வாரிசு அரசியலுக்கு வாக்கப்பட்ட உங்களைப் பற்றி பேச பாஜகவிற்கோ எனக்கோ அருகதை இல்லை என்பது உண்மைதான் வைகோ அவர்களே!
முல்லைப் பெரியாறு பற்றி அகரம் தெரியாத அண்ணாமலை உங்கள் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று அறிவித்து உள்ளீர்கள்! நன்றி! ஆனால் அதன் சிகரம் தெரிந்த நீங்கள் சீறி இருக்க வேண்டாமா? மக்கள் பிரச்சினைக்காக விவசாயிகளுக்காக நான் போராடும் போது அதை தள்ளி நின்று எள்ளி நகையாடுவது யாரை திருப்திப்படுத்த?
காலம் காலமாக தமிழகத்தில் போராட்டத்திற்கு மட்டும் பயன்பட்ட காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் மீனவர் பிரச்சினைக்கும் தீர்வு கண்ட கட்சி பாஜகதான். ஆகவே முல்லைப் பெரியாறு அணை குறித்து போராடவும் பேசவும் முழு உரிமையும் தகுதியும் உள்ள ஒரே கட்சி பாஜக என்பதை மக்கள் அறிவார்கள்!- என்று தனது பதிலடியால் வைகோ.,வை திணறடித்திருக்கிறார் அண்ணாமலை.