
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
வேதாந்தம் என்றால் வேதங்களின் முடிவான பகுதி என்று பொருள். அவையே உபநிஷத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வேதங்கள்,”கர்மம் மற்றும் ஞானம்” ஆகிய இரண்டைப்பற்றி வலியுறுத்திக் கூறுகின்றன. வேதங்களின் முதல் பாகம் கர்மத்தைப் பற்றியும் இரண்டாவது, அதாவது உபநிஷத் பாகம் ஞானத்தைப் பற்றியும் விளக்குகின்றன.
மஹரிஷி ஜைமினி கர்ம காண்டத்தைத் தொகுத்து அதற்கு பாஷ்யம் எழுதியுள்ளார். அதுவே “மீமாம்சை” என்று கூறப்படுகிறது. பகவான் வேதவியாஸர் உபநிஷத்துக்கள் கூறும் ஞான மார்க்கங்களைத் தொகுத்து விளக்கம் எழுதியுள்ளார்.
இவ்விரு மஹான்களும் முறையே மீமாம்சை மற்றும் வேதாந்தம் ஆகியவற்றை உபதேசம் செய்து மனித குலத்திற்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார்கள்.
வியாஸரின் பிரஹ்ம தத்துவத்தைப் பற்றிய தொகுப்புகளுக்கு சங்கரபகவத்பாதர் பாஷ்யம் எழுதியுள்ளார். சங்கரர் அவ்வாறு விளக்கியுள்ளதே அத்வைத ஸித்தாந்தமாகும்.
சங்கரர்தான் அத்வைத ஸித்தாந்தத்தைக் கண்டு பிடித்தார் என்று யாராவது கூறினால் அது தவறாகும். சங்கரர் பிரச்சாரம் செய்தது வேதாந்தம்; அவர் கண்டு பிடித்ததல்ல. அத்வைதம் என்னும் வார்த்தை உபநிஷத்துக்களில் தோன்றியதே தவிர, சங்கரர் காலத்தில் தோன்றியது அல்ல.
ஸலில ஏகோ த்ரஷ்டா அத்வைத: என்று ப்ரஹ்தாரண்யக உபநிஷத் தெளிவாகக் கூறுகிறது. மாண்டூக்ய காரிகையில் மாயாமாத்ரமிதம் த்வைதம் அத்வைதம் பரமார்த்தந: என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே அத்வைதம் என்ற வார்த்தை உபநிஷத்துக்களிலிருந்தே முதலில் வந்தது. சங்கரர் கண்டுபிடித்ததல்ல. ஆனால், அவரே அவை எல்லாவற்றையும் தொகுத்து, மக்களுக்கு மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாஷ்யம் எழுதி விளக்கினார்.