குடியரசு தின அலங்கார ஊர்தி; தமிழக அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு!

Published:

republic day parade - 2026
2021 அலங்கார ஊர்தி கோப்புப் படம்

தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் அலங்கார ஊர்தி ஊர்வலம் நடத்தும் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுவதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இந்திய குடியரசு நன்னாளில் தமிழகத்தின் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் அலங்கார ஊர்தி ஊர்வலம் நடத்திடும் தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்..

ஜனவரி 26ஆம் தேதி அன்று நடைபெறும் இந்திய குடியரசு அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் விதமாக அலங்கார ஊர்தி அணி வகுப்பு ஊர்வலம் நடத்திட அறிவிப்பு செய்துள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை இந்து முன்னணி பாராட்டுகிறது.

மேலும், இந்திய சுதந்திரப்போரின் முன்னோடியாக விளங்கிய மாவீரர்கள் பூலித்தேவன், வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், அழகு முத்துக்கோன் உள்ளிட்டவர்களையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு., முத்துராமலிங்கத் தேவர் என அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களை அனைத்து மாவட்ட தலைநகர்களில் சிறப்பிக்கும் விதமாக காட்சிப்படுத்திடவும், முதல் சுதந்திரப்போரின் முன்னோட்டமாக நடைபெற்ற ஆற்காடு கலவரம், வந்தவாசி பேரர், முதல்  சுதந்திரப் போரின் களமான வேலூர் கோட்டை போன்றவற்றையும் காட்சிப்படுத்தி, வருங்கால சமுதாயத்திற்கு சுதந்திரப் போரில் தமிழகத்தின் பெருமைமிகு பங்களிப்பை உணர்த்தும் வகையில் வெளிப்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.

மாவீரர் பூலித்தேவன் புகழை போற்றும் வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சிலை நிறுவி அவரது வரலாற்று சம்பவங்களை கல்வெட்டுக்களில் பதிப்பித்தால் சிறப்பாக இருக்கும். மேலும், இத்தகையோர் வரலாறு, பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் அறிந்து போற்றும் வண்ணம் 4ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வரலாற்று நூலில் இடம்பெற பாடத்திட்டத்தில் சேர்த்திடுவது அவசியமாகும்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

எனவே, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், தான் முன்னெடுத்துள்ள நல்லதொரு பணியை முழுமையாக்கி, தமிழகத்தின் எல்லா தரப்பினரும் சுதந்திரப்போரின் தியாக வரலாற்றையும், தமிழகத்தின் சீரிய பங்களிப்பையும் அறிந்திட ஆவன செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்…. என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img