
அரியலூரில் பள்ளி மாணவி லாவண்யா உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு பாஜக., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது.
கிறிஸ்துவப் பள்ளியில் பயின்று வந்த ஏழை இந்து மாணவி லாவண்யா, கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று தன்னையும் தன் பெற்றோர்களையும் பள்ளியில் வற்புறுத்தியதாகவும், தான் மறுத்துவிட்டதால், தன் படிப்பை நாசமாக்கி, தன்னை வேறு வேலைகளைச் செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் சொல்லி, விஷம் அருந்தினார்.
அவரது மரண வாக்குமூலத்தில், மத ரீதியான கொடுமைப்படுத்தல் இருந்ததாகவும், அதனால் தான் இதை கிறிஸ்துவ வலுக்கட்டாய கட்டாய மதமாற்றத்துக்கு எதிராகக் கையாள்வதாகவும் இந்து இயக்கங்கள் கூறின. இந்நிலையில், தமிழக பாஜக., சார்பில் நேற்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பாஜக.,வினர் மற்றும் இந்து இயக்கத்தினர் பெரும்பான்மையாக பங்கேற்று மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய கே.அண்ணாமலை… அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மதச்சாயம் பூசவில்லை என்று கூறினார்.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், இந்த விவகாரத்தை சிபிஐ., தன் கையில் எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று, கே. அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக கட்டாயம் சிபிஐ., விசாரணை தேவை. மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை விசாரணை அதிகாரியிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை பாஜக., போராடும். மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோ போலியானது என்பதற்கு ஆதாரம் இல்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
மாணவி இறந்த விவகாரத்தில் யாரும் மதச்சாயம் பூசவில்லை. உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரினார்.