
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நால்வர்களில் ஒருவரான சுந்தரமூா்த்தி நாயனார் இடக்கண் ஒளி பெற்ற திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறைவன் சொல்லை மீறி நடந்ததால் நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இடது கண் பாா்வையை இழந்தார்.
பின்னா் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி அவரது பதிகம்பாடி இடக்கண் பாா்வை பெற்றார் என்பது வரலாறு. சுந்தரர் பார்வை பெற்ற நாளான மாசிமாத திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டு தோறும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு மூலவருக்கும், உற்சவருக்கும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தன.
பின்னா், சுந்தரமூர்த்தி நாயனார் ஏகாம்பரநாதர் சந்நிதி முன்பாக தனக்கு கண்பார்வை வேண்டி வணங்குவதும், சிவபெருமான் கண்பாா்வை கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

அப்போது சிவனடியார்கள் பலரும் தேவாரத் திருப்பதிகத்தை பாடி வழிபட்டனர். தொடா்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா வந்தார்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.