
அயோத்தி ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராமா் பாதம் ராமேசுவரத்திலிருந்து வாகன யாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டது.
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதை முன்னிட்டு, ராஷ்ட்ரிய கவி சங்கம் சாா்பில் அக்கோயிலில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அதற்காக, ராமர் இலங்கையில் எழுந்தருளி சீதாபிராட்டியை மீட்ட நுவெரெலி மாவட்டம் சீதாவதி எனும் இடத்திலிருந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ராமர் பாதம் கொண்டுவரும் வாகன யாத்திரை தொடங்கியது.
மேலும் இலங்கையில் முதலில் அனுமன் இறங்கிய இடத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து ராமேஸ்வரத்துக்கு ராமர் பாதம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த யாத்திரையானது, ராமேஸ்வரத்துக்கு புதன்கிழமை வந்து சேர்ந்தது. அங்கு, ராமர் பாதத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அங்கிருந்து மதுரை நோக்கி ராமர் பாதம் வாகன யாத்திரை வியாழக்கிழமை காலை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, மத்திய பிரதேசம் ராஷ்ட்ரிய கவி சங்க நிா்வாகி பாபா சத்யநாராயணா தலைமை வகித்தார். சௌராஷ்ட்ரா முன்னேற்றக் கழகத் தலைவரும், மதுரை தொழிலதிபருமான வி.ஜி. ராமதாஸ், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் கே. முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தரப் பிரதேச பசு பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மீரட் சந்தீப் பெகல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதில், அகா்வால் சமாஜம் சுரேஷ்குப்தா, மதுரை தொழிலதிபா் சஞ்சய் மெஹ்ரா, பசு பாதுகாப்பு இயக்கம் மீரட் தீபக் தியாகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ராமர் பாதம் சுமந்து வரும் வாகனம் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 9 மணி வரையில் காமராஜா் சாலையில் உள்ள சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.
அங்கு, பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சேலத்துக்கு யாத்திரை வாகனம் புறப்படுகிறது.
ராமபிரான் சென்ற இடங்களுக்கெல்லாம் ராமர் பாதம் கொண்டுசெல்லப்படும் எனவும், 40 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ராம நவமியன்று அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் இந்த யாத்திரை நிறைவடையும் எனவும், ராஷ்ட்ரிய கவி அமைப்பினர் தெரிவித்தனர்.