முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனைநடத்தி வரும் நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., வீட்டில் தென்காசி டி.எஸ்.பி. மதியழகன் தமையிலான போலீசார் இன்று சோதனை நடத்தினர்.வீட்டுக்குள் யாரும் செல்ல முடியாதபடி கதவுகளை அடைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெறுவதையொட்டி அவரது வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



சோதனை நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., வீட்டு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு வந்தார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதனையடுத்து அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது
சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்திவருகிறது.
கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை, 58 கோடியே 23 லட்ச ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது வருமானத்தை விட 3,928% சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கீழ் இயங்கிய துறையான ஊரக வளர்ச்சித் துறையில் சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றும் சரவணனுக்கு ஒப்பந்த பணிகள்விட்டதில் நடைபெற்ற ஊழலில்தொடர்பு இருக்கலாம் என்பதால் அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் கண்காணிப்பு பொறியாளர் சரவணனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீட்டுக்கு எதிரே உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் வீடு ஒதுக்குப்புறமாக கிராமத்தின் தோட்டப் பகுதியில் உள்ளதால் நடைபெறுவது வெளியில் தெரியாமல் உள்ளது. சோதனை நடைபெறும் வீட்டில் சரவணன் சகோதரி தங்கம்மாள் மட்டுமே உள்ளார்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜப்பெருமாள். இவர், ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது சென்னை, ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 6:30 முதல் சோதனையை துவங்கியுள்ளனர்.
அதேபோல், ஆத்தூர், உடையார்பாளையம் பகுதியில் உள்ள ஏ.வி.ஆர் ஜுவல்லர்ஸ் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துகின்றனர்.





