கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தொடர் தீ விபத்து ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில்
தற்போது வனத்தில் தீ பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தொடர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏராளமான மரங்கள் மற்றும் மூலகைச்செடிகள் எரிந்து சேதமாகின.வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ விபத்து ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வருவாய் நிலங்களில் ஒரு சிலர் பற்ற வைக்கும் தீ வனப்பகுதிக்குள் பரவி விடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதனால் தீ விபத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் முக்கிய இடமான கிறிஸ்தவ கல்லறை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நகர் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அடிக்கடி தீ விபத்து நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கொடைக்கானல் அருகே உள்ள பாம்பு சோலை வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்களால் பல்வேறு குப்பைகள் தூக்கி வீசப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.இதனை நகரில் உள்ள சோலைக்குருவி தன்னார்வலர்கள் இணைந்து சோலைக்குள் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றினர்.





